Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரிய வெங்காயத்தை தொடர்ந்து பூண்டு விலையும் அதிரடி உயர்வு: கிலோ ₹500க்கு விற்பனையாவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சென்னை: பெரிய வெங்காயம் விலை அதிரடியாக உயர்ந்து வரும் நிலையில் தற்போது பூண்டு விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ₹500க்கு விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர் மழையால் வெங்காய விளைச்சல் கடந்த சில மாதங்களாக குறைந்துள்ளது. அது மட்டுமின்றி, வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம் போன்ற காரணங்களால் வெங்காயம் விலை உயர தொடங்கியுள்ளது. சென்னையை பொறுத்தவரை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 60 முதல் 65 லாரிகளில் வெங்காயம் கொண்டுவரப்படும்.

தற்போது அந்த மாநிலங்களில் மழை மற்றும் விளைச்சல் பாதிப்பால் வெங்காயம் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு தற்போது 30 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வந்து கொண்டிருக்கிறது. இதனால், வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 80 முதல் 90 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர்ந்து கிலோ ₹100 வரை உயர்ந்தது. சில்லரை காய்கறி கடைகளில் ஒரு கிலோ 120 முதல் 130 ரூபாய் அளவிற்கு விற்கப்படுகிறது. இப்போது உச்சம் தொட்டுள்ள வெங்காயத்தின் விலை இன்னும் ஒரு சில வாரங்களுக்கு இப்படியே நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வெங்காயம் சமையலில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதன் விலை உயர்வு இல்லத்தரசிகளை கவலையில் ஆழ்த்தியிருந்தது. இந்த அதிர்ச்சியை தாங்குவதற்குள் தற்போது பூண்டு விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து அதிகளவில் பூண்டு விற்பனைக்கு வருகிறது. தினசரி 150 டன் அளவிலான பூண்டு வருவது வழக்கம். தற்போது மத்திய பிரதேசத்தில் இருந்து 25 டன் பூண்டு மட்டுமே வருகிறது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டு கடந்த சில நாட்களாகவே பூண்டு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ ₹300க்கு விற்ற முதல் ரக பூண்டு தற்போது ₹350ஆக அதிகரித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனை கடைகளில் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ பூண்டு ₹220 முதல் ₹350 வரையிலும், சில்லரை விற்பனையில் ஒரு கிலோ பூண்டு ₹300 முதல் ₹400 வரையிலும் விற்கப்படுகிறது. இதனால் சூப்பர் மார்க்கெட்களில் ஒரு கிலோ பூண்டு ₹450 முதல் ₹500 வரை விற்கப்பட்டு வருகிறது. வெங்காயம் விலை ஏற்கனவே ஒரு கிலோ ₹100ஐ தாண்டியுள்ள நிலையில் தற்போது பூண்டு விலையும் அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை பெரிதும் கவலை அடைய செய்துள்ளது.

இதுகுறித்து பூண்டு மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, ‘கோயம்பேடு சந்தைக்கு மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து தான் அதிக அளவில் பூண்டு விற்பனைக்கு வரும். இந்த மாநிலங்களில் தற்போது பூண்டு சீசன் முடியும் தருவாயில் உள்ளது. இதனால் வரத்து குறைந்து விலை அதிகரித்து வருகிறது. இனி வரும் நாட்களில் பூண்டின் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. ஜனவரி மாத இறுதியில் மீண்டும் வரத்து அதிகரித்து பூண்டு விலை படிப்படியாக குறையும்’ என்றார்.