Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு தமிழ்நாட்டில் நோய் தடுப்பு பணிகள் தீவிரம்: பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்

சென்னை: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதலே கோடை வெயின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி மே மாதம் உச்சத்தை தொட்டது. இதனால் மக்கள் வெளியில் வருவதற்கு அச்சப்பட்டனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது.

இதனால் மழைநீர் ஆங்காங்கே தேங்கியது. இதில் நோய் பரப்பும் கொசு உருவாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி வழக்கமாக மழைக்காலத்தில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் ஏடிஸ் கொசு உற்பத்தி அதிகரித்து அதன் மூலம் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படும். கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டினை போக்க இல்லங்களில் தண்ணீர் தேக்கி வைத்திருப்பது வழக்கம்.

இதனால் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரில் இருந்தும் டெங்குவை உருவாக்கும் ஏடிஸ் கொசு உற்பத்தி அதிகரிப்பது மூலம் டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது. தமிழகத்தில் மே மாதத்தில் மட்டும் இதுவரை 190 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக டெங்கு பாதிப்பு அந்த பகுதிகளில் அதிகமாக பதிவாகி வருகிறது.

இந்தாண்டு ஜனவரியில் மழைக்காலம் முடிந்து அதனால் ஏற்பட்ட டெங்கு பாதிப்பு படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் மீண்டும் டெங்கு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இனி வரும் காலங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும். எனவே நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு தற்போது குறைவாக தான் உள்ளது. ஜனவரி மாதம் 1000 ஆக இருந்த டெங்கு பாதிப்பு மே மாதம் 100 ஆக குறைந்து உள்ளது. மேலும் தற்போது மழை பெய்து வருவதால் டெங்கு பாதிப்பு அதிகரிக்க அதிக வாய்புள்ளது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையை சேகரிக்க மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தவிட்டு உள்ளோம்.

மேலும் ஒரு பகுதியில் டெங்கு பாதிப்பு அதிகரித்தால் அந்த பகுதிகளுக்கு சென்று ஏன் பாதிப்பு அதிகரித்தது என்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தி உள்ளோம். அதேபோல, ஏடிஸ் லார்வாக்களை கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொள்ளவும், கொசு மருந்து தெளிப்பு பணிகளை மேற்கொள்ளவும், நோய் தடுப்பு பணிகள் குறித்து தினசரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் உள்ளாட்சி துறையுடன் இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் தண்ணீரில் சரியான அளவு குளோரின் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து வருகிறோம். மேலும் அரசு மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்பிற்கு சிகிச்சைகள் வழங்குவதற்கான மருந்து மாத்திரைகள் கையிருப்பில் வைத்திருக்கவும், தேவைப்பட்டால் காய்ச்சல் வார்டுகளில் படுக்கைகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொள்ளவும் மாவட்ட மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடையில் மழை பெய்யும்போது பூமியின் உஷ்ணம் அதிகரிக்கும். உஷ்ணம் அதிகரிக்கும் போது அதிக கொசுக்கள் உருவாகும்.

எனவே மக்கள் வீடுகளை சுற்றியும், ஆங்காங்கே மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் கடுமையான உடல் வலி, அதிக காய்ச்சல், வாந்தி, மூட்டு வலி, உடல் சோர்வு, தட்டணுக்கள் குறைவு போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று உரிய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பிறகு உடனடியாக வீடு திரும்ப கூடாது. அனைத்து பரிசோதனைகளும் செய்த பிறகே வீடு திரும்ப வேண்டும். வீடுகளை சுற்றி மட்டுமின்றி மக்கள் பணிபுரியும் அலுவலகம் அமைந்து உள்ள இடங்களிலும் கொசு உருவாகும். எனவே அலுவலத்தை சுற்றி சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

* டெங்கு பாதிப்பு அறிகுறிகள்

தொடர் காய்ச்சல், உடல் முழுவதும் தடிப்புகள், உடல் வலி, அடிவயிற்றில் கடுமையான வலி, தொடர்ந்து வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை டெங்கு காய்ச்சலின் பொதுவான அறிகுறிகள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த அறிகுறிகள் ஏற்பட்ட 5 நாட்களில் சிவப்பு நிறத்தில் சின்ன சின்னதாக புள்ளிகள் உடல் முழுவதும் வருவது, பற்கள் மற்றும் உள் உறுப்புகளில் இருந்து ரத்த கசிவு ஏற்படுவது டெங்கு சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது.