சென்னை: சென்னை விமான நிலையத்தில் 300க்கும் மேற்பட்ட அரசு அங்கீகாரம் பெற்ற ப்ரீபெய்டு டாக்ஸிகள் கடந்த 1989ம் ஆண்டிலிருந்து இயங்கி வருகின்றன. ஆனால், சமீபகாலமாக தடை விதிக்கப்பட்ட ஒயிட் போர்டு வாகனங்கள் விமான நிலையத்திற்குள் புகுந்து பயணிகளை சவாரி ஏற்றி செல்வதாக கூறப்படுகிறது.இந்த தடையும் மீறி ஒயிட் போர்டு வாகனங்கள் பாதுகாக்கப்பட்ட விமான நிலையத்திற்குள் வந்து பயணிகளை சட்ட விரோதமாக ஏற்றி செல்வதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
ஆனாலும், இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படாமல், ஒயிட் போர்டு வாகனங்கள் தொடர்ந்து சென்னை விமான நிலையத்திற்குள் வந்து சட்டத்துக்கு புறம்பாக பயணிகளை வாடகைக்கு ஏற்றி செல்வதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று ப்ரீபெய்டு டிரைவர்கள் சுமார் 100 பேர், சென்னை விமான நிலையத்திற்குள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து, சென்னை விமான நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதோடு போராட்டம் நடத்திய ப்ரீபெய்டு டாக்ஸி டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீஸ் தரப்பில் புகார்களை முறையாக எழுதிக் கொடுங்கள். நாங்கள் உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர். எனவே, ப்ரீபெய்டு டாக்ஸி டிரைவர்கள் சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


