Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சூப்பர்பெட் செஸ் கிளாசிக்: பிரக்ஞானந்தா சாம்பியன்

புகாரெஸ்ட்: ரோமானியாவில் நடந்து வந்த சூப்பர்பெட் செஸ் கிளாசிக் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அபாரமாக ஆடி சாம்பியன் பட்டம் வென்றார். ரோமானியாவின் புகாரெஸ்ட் நகரில் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் போட்டிகள் நடந்து வந்தன. இப்போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட பிரக்ஞானந்தா 9 சுற்றுகள் முடிவில், 5.5 புள்ளிகள் பெற்றார். அவரைப் போல், பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரும் பிளிட்ஸ் செஸ் முன்னாள் உலக சாம்பியனுமான மேக்சிமா வஸியெர் லக்ரேவ், ஈரான் கிராண்ட் மாஸ்டர் அலிரெஸா ஃபிரோஸ்ஜா ஆகியோரும் 5.5 புள்ளிகள் பெற்றதால்,

யாருக்கு முதலிடம் என்பதை தீர்மானிக்க டைபிரேக்கர் போட்டிகள் நடத்தப்பட்டன. பிரக்ஞானந்தா - ஃபிரோஸ்ஜா இடையே நடந்த போட்டி டிரா ஆனது. அதைத் தொடர்ந்து, ஃபிரோஸ்ஜா - மேக்சிமா இடையே நடந்த போட்டியும் டிரா ஆனது. அதையடுத்து, மேக்சிமாவுடன் நடந்த போட்டியில் பிரக்ஞானந்தா அபார வெற்றி பெற்றதால் அவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இப்போட்டிகளில் உலக செஸ் சாம்பியன் குகேஷ் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று 9ம் இடம் பிடித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

ரோமானியாவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ரோமானியாவில் நடைபெற்ற ‘சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025’ போட்டியில் வாகைசூடி, தனது முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்றுள்ள ‘நமது சென்னையின் பெருமிதம்’ கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள்.

கிளாசிக்கல் மற்றும் பிளிட்ஸ் சுற்றுகளில் அசாதாரணமான அமைதியையும் உத்திமிகுந்த ஆழத்தையும் அவரது திறமையான ஆட்டம் வெளிப்படுத்தியது. இந்திய சதுரங்கத்தின் குறிப்பிடத்தக்க இந்த தருணத்தை தமிழ்நாடே கொண்டாடுகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.