பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் கோயிலில் மாற்று திறனாளியை சாதி பெயரை சொல்லி காலால் எட்டி உதைத்த ஊராட்சி மன்ற தலைவரின் மகன்
பொழிச்சலூர்: செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் மாற்றுத் திறனாளியை பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் தினேஷ் பாபு சாதி பெயரை சொல்லி திட்டி, காலால் எட்டி உதைத்துள்ளார். மாற்று திறனாளியை காலால் எட்டி உதைக்கும் அதிர்ச்சிகர சிசிடிவி காட்சி வெளியானது.
பல்லாவரம் அருகே பொழிச்சலூர், விநாயகா நகர், மாசிலாமணி தெருவை சேர்ந்தவர் ஞானமணி. இவர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவரது மகன் சரவணன் (35). மாற்றுத்திறனாளி. நேற்று அப்பகுதியில் பிரசித்தி பெற்ற, மிகப் பழமையான அகத்தீஸ்வரர் கோயிலுக்கு மாற்றுத் திறனாளியான சரவணன் சென்றுள்ளார்.
கோயிலுக்குள் தற்போதைய பொழிச்சலூர் ஊராட்சி மன்றத் தலைவர் வனஜாவின் மகன் தினேஷ்பாபு (35) இருந்துள்ளார். இருவருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக முற்றியது. இதில் ஆத்திரமான தினேஷ்பாபு, தனது நண்பருடன் சேர்ந்து மாற்றுத்திறனாளி வாலிபர் சரவணனை சரமாரி தாக்கியுள்ளனர். பதிலுக்கு, தினேஷ்பாபுவை தனது ஊன்றுகோலால் சரவணனும் தாக்கியுள்ளார். இதில் இருவரும் காயமடைந்தனர்.
இதை பார்த்து கோயிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்கள் அதிர்ச்சியாகி சிதறி ஓடினர். இச்சந்தர்ப்பத்தில், தாக்குதலில் ஈடுபட்ட தினேஷ்பாபு தப்பியோடி விட்டார். இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் பல்வேறு சமூகவலை தளங்களில் வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. சங்கர்நகர் போலீசார் தினேஷ்பாபுவின் நண்பரை போலீசார் பிடித்து, தலைமறைவான தினேஷ்பாபு குறித்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.
கடந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்த பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் கோயிலில், கடந்த சில மாதங்களாக பக்தர்கள் அளிக்கும் நன்கொடை, எண்ணெய் மற்றும் சிதறுதேங்காய்களை உரிமை கொண்டாடுவது தொடர்பாக 3 குழுக்களுக்கு இடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இதுவே தற்சமயம் கோயிலுக்குள் இருந்த மாற்று திறனாளி வாலிபரை ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் தாக்குதலாக மாறியிருக்கிறது என்று அப்பகுதி மக்கள் தரப்பில் கூறுகின்றனர்.
மேலும், தலைமறைவான ஊராட்சி மன்றத் தலைவர் வனஜாவின் மகன் தினேஷ்பாபுமீது, சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இவர் சங்கர்நகர் காவல் நிலையத்தில் முன்னாள் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

