Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆட்சி அதிகாரம் பெரிதல்ல மக்களுக்காக பணி செய்வதே அதிமுகவின் நோக்கம்: எடப்பாடி அறிக்கை

சென்னை: ஆட்சி அதிகாரம் பெரிதல்ல. மக்களுக்காக பணி செய்வதுதான் அதிமுகவின் நோக்கம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: ‘மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ என்கிற எனது எழுச்சி பயணம் உங்களின் பேராதரவோடு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டத்தை முன்னெடுக்கும் மிக முக்கிய பொறுப்பினையும், அதற்குண்டான நேர்மையுடனும் அவர்களை வழிநடத்தும் ஒரு முன்கள வீரனாக நான் இருப்பதில் பெருமையடைகிறேன்.

எனது எழுச்சி பயணத்தை ஜூலை 7ம் தேதி கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் துவங்கி, ஜூலை 25ம் தேதியில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி வரை நிறைவு செய்திருக்கிறேன். கோவை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில், 46 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றிகரமாக சுமார் 18.5 லட்சம் மக்களை நேரடியாக சந்தித்திருக்கிறேன். அவர்களை பார்த்து, அவர்களின் குறைகளை கேட்டு, அவர்களின் மனநிலையை அறிந்தேன். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்வேன். நான் சென்ற இடங்களில் எல்லாம் என்னை ஆர்வமுடன் சந்தித்த அனைவருமே, அவர்கள் சந்தித்து வரும் வேதனைகளை எடுத்துரைத்தனர்.

ஆட்சி அதிகாரம் பெரிதல்ல. மக்களுக்காக பணி செய்யும் மக்களாட்சி வழங்குவதுதான் அதிமுக அரசின் நோக்கம். அதிமுக ஆட்சி காலத்தில் கடுமையான வறட்சி இருந்தது. கஜா புயல் போன்ற இயற்கை பேரிடர்கள், கொரோனா பாதிப்பு இருந்தன. அரசுக்கு வருமானமே இல்லை. அப்படி நெருக்கடியான காலகட்டத்திலும்கூட அருமையான நிதி நிர்வாகத்தை மேலாண்மை செய்து முழுமையான நல்லாட்சியை தந்தோம். ஆனால், இப்போது திமுக ஆட்சியில் வருமானம் அதிகம், மத்திய அரசு செய்த உதவிகளும் அதிகம். அதிகமான நிதியை கடனாகவும் பெறுகிறார்கள்.

திமுக ஆட்சியில் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று மாயையை கட்டமைக்க முயல்கிறார்கள். ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அதிமுக ஆட்சியில் போட்ட விதை தான் இன்று பெரிய மரமாக வளர்ந்து நிற்கிறது. அதைத்தான் திமுக அரசு அறுவடை செய்துகொண்டிருக்கிறது. ஒரு மரம் பலன் தர வேண்டுமென்றால் அது ஒரு நாளில் தராது. அதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளும். அதைப்போல அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தொலைநோக்கு திட்டங்களால் பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு தற்போது அடைந்திருக்கிறது. எனது எழுச்சி பயணம் தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.