Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறுவன் வாயில் மதுவை ஊற்றி வீடியோ பதிவு செய்த கொடுமை: 4 பேர் கைது

செய்யாறு: கோயில் திருவிழாவில், சிறுவன் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி குடிக்க வைத்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த சுமங்கலி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி இரவு நடந்த அம்மன் ஊர்வலத்தில் அப்பகுதி சிறுவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, அதே கிராமத்தை சேர்ந்த கோழிப்பண்ணை தொழிலாளி செந்தில்குமார்(26), கட்டிட மேஸ்திரி அஜீத்(25), டிராக்டர் டிரைவர் நவீன்குமார்(21) மற்றும் ஐடிஐ படிக்கும் 17 வயது மாணவன் ஆகியோர் ஓரிடத்தில் அமர்ந்து `பீர்’ குடித்தனர். அப்போது, அவ்வழியாக அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் நடந்து சென்றான். அவனை பார்த்த 4 பேரும் அருகே அழைத்து `பீர்’ குடிக்கும்படி கூறினர். ஆனால், சிறுவன் மறுத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்றான்.

உடனே 4 பேரும் சிறுவனை பிடித்து வலுக்கட்டாயமாக வாயில் பீரை ஊற்றி குடிக்க வைத்தனர். அதை தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ அப்பகுதி முழுவதும் வைரலாக பரவியது. பாதிக்கப்பட்ட சிறுவன் நடந்த சம்பவத்தை அழுதபடியே பெற்றோரிடம் கூறினான். இதுகுறித்து சிறுவனின் தந்தை மோரணம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, சிறுவனை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்த செந்தில்குமார், அஜீத், நவீன்குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இதில், 17 வயது சிறுவனை கடலூர் சிறார் சிறையிலும், மற்ற 3 பேரையும் வந்தவாசி கிளைச்சிறையிலும் அடைத்தனர்.