அஞ்சல் துறையில் வரும் 4ம் தேதி முதல் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்: மத்திய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
சென்னை: அஞ்சல் துறையில் வரும் 4ம் தேதி முதல் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். அஞ்சல் துறையின் புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் 2.0 வரும் 4ம் தேதி முதல் சென்னை மத்திய அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் புதிதாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்ப மென்பொருள் ஒன்றிய அரசின் டிஜிட்டல் இந்தியா கொள்கையின்படி நாட்டின் வளர்ச்சிக்கு துணை செய்வதாக அமையும்.
இந்த மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவையை தடையற்ற மற்றும் பாதுகாப்பான முறையில் செயல்படுத்த வரும் 2ம் தேதி பரிவர்த்தனைகள் இல்லாத நாளாக திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, சென்னை மத்திய அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட தபால் நிலையங்களில் எந்த ஒரு தபால் சேவையும் மேற்கொள்ளப்படாது. புதிய தொழில்நுட்பம் சீராக செயல்படுவதை உறுதி செய்வதற்கு இந்த தற்காலிக சேவை இடைநிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தவிர்க்க முடியாத ஒரு நாள் சேவை இல்லாத நாள் அனைத்து மக்களுக்கும் மிகச் சிறந்த துரித டிஜிட்டல் சேவைகளை பெற வழி வகுக்க எடுக்கப்பட்டது. ஆகவே பொதுமக்கள் இந்த சேவை இல்லா நாளை கணக்கில் கொண்டு தங்களுடைய அஞ்சல் சேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு பெறுமாறு அஞ்சல் துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.