Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கட்சியில் பதவியை தக்கவைக்க போராடும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘உதவியாளர் நீட்டும் கோப்புகளில் மட்டும் சளைக்காமல் கையெழுத்து போடுகிறாராமே மாநகராட்சியில் பணிபுரியும் உதவி ஆணையர் ஒருத்தர்...’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘கோவை மாநகராட்சியில் சர்ச்சைக்குள்ளான பல அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், வடக்கு மண்டலத்தில் உள்ள மண்டல உயரதிகாரியை மட்டும் யாரும் அசைக்க முடியவில்லையாம்.. இவர், நகரமைப்பு பிரிவு கோப்புகள், வருவாய் பிரிவு கோப்புகள் ஆகியவற்றை கையெழுத்து போடாமல் நிறுத்தி வைத்து விடுகிறாராம்.. குறைந்தபட்சம், எம்.எல் புக்கில்கூட கையெழுத்து போடுவதில்லையாம்.. கரன்சி கைமாறினால் மட்டுமே இவை அங்கிருந்து நகருகிறதாம்.. சொத்து வரி, காலியிட வரி, பெயர் மாற்றம் போன்றவற்றுக்கு விண்ணப்பித்தவங்க.., உடனடியாக கிடைக்கும்னு எதிர்பார்த்து ஏமாந்து போவதுதான் மிச்சமாம்.. அதே சமயத்தில், இவர் இரண்டெழுத்து பெயர் கொண்ட ஒரு அரசியல் உதவியாளரை கைக்குள் போட்டுக்கொண்டு, அவர் நீட்டும் கோப்புகளில் மட்டும் சளைக்காமல் கையெழுத்டுகிறாராம்.. இவர்கள் கூட்டணி பலமாக இருப்பதால், கரன்சி குவியலுக்கு பஞ்சமே இல்லையாம்.. பல நேரத்தில், அந்த உதவியாளர் மேலே கொடுக்க வேண்டும் எனக்கூறி, அந்த அதிகாரிக்கு தெரியாமல் இவரே தனியாக ஆட்டையை போட்டு விடுகிறாராம்.. இவர்கள் இருவரும் சேர்ந்து, பொதுமக்களிடத்தில் அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்துவதில் உச்சத்தில் இருக்கிறார்களாம்.. எனவே, இருவரையும் `களை’யெடுக்க வேண்டும்னு கோரிக்கை வலுத்துட்டு இருக்கு...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கட்சியில் தனது பதவியை தக்க வைக்கவே போராடி வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் மாஜி அமைச்சர்பற்றி தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கடலோர மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சி மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ மாவட்டத்தில் அரசியல் ரீதியாக தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள பல்வேறு கட்ட முயற்சிகளை செய்துட்டு வருகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் கட்சியில் செல்வாக்கு குறைந்ததால் சைலண்டாக இருந்து வந்த ‘மணியானவர்’ திடீரென போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளாராம்.. இதற்கு முக்கிய காரணம், கட்சியில் மாஜி அமைச்சர் இரண்டு எழுத்து பெயர் கொண்ட ஒருவருக்கு, தொண்டர்களிடம் செல்வாக்கு அதிகரித்து வருவதாக ‘மணியானவர்’ எண்ணுகிறாராம்.. இப்படி சென்றால் மாவட்ட செயலாளர் பதவி நம்மிடம் இருந்து பறிபோய் விடும். இதனால் பதவியை தக்க வைக்கவும், அரசியல் ரீதியாக தன்னுடைய இருப்பை கடலோர மாவட்டத்தில் தக்க வைத்துக்கொள்ள இலை கட்சி சார்பில் போராட்டம், ஆர்ப்பாட்டத்தை தற்போது கையில் எடுத்துள்ளாராம்.. மாவட்டம் முழுவதும் கட்சிக்குள்ளே இந்த டாப்பிக்தான் பரபரப்பா பேசப்பட்டு வருகிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அல்வா மாவட்டத்தில் அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கும் சின்ன மம்மிக்கு எதிராக இலைக்கட்சியினர் போர்க்கொடி தூக்கியிருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘அதாவது.. சின்ன மம்மி அதிமுகவில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டு விட்டாரு... அப்படி இருக்கும்போது அல்வா மாவட்டத்திற்கு அடுத்தக்கட்ட சுற்றுப்பயணத்திற்கு வரும் அவரை வரவேற்று இலை கட்சியின் கொடியை அவரது ஆதரவாளர்கள் கட்டியிருக்காங்களாம்.. அவர் தங்கும் ஓட்டல் பகுதியிலும் முழுவதும் இலை கட்சியின் கொடிகள் கட்டப்பட்டு இருக்காம்.. இது உள்ளூர் இலை கட்சியினருக்கு கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.. ஏற்கனவே சின்ன மம்மியால் பாதிப்பு அடைந்த பலரும் இலை கட்சியினரை உசுப்பி சூடேற்றி விட்டிருக்காங்க.. உடனே மனுவை தயாரித்த இலை கட்சியினர், நாங்கள் மட்டும் தான் கொடியை பயன்படுத்த இயலும். எங்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர், அதிமுக உறுப்பினராக இல்லாதவரை வரவேற்று சட்டவிரோதமாக கொடியை நட்டியிருக்காங்க.. நீதிமன்றமும் அதிமுகவினர் தவிர வேறு யாரும் கொடியை பயன்படுத்தக் கூடாதுன்னு உறுதி செய்து உத்தரவிட்டிருக்கு... எனவே கட்சிக்கு சம்பந்தமில்லாதவரை வரவேற்று நடப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்ற வேண்டுமென்று உள்ளூர் போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு அளித்திருக்காங்க.. இதனால் சின்ன மம்மி வரும் முன்பே அல்வா மாவட்டத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பரம்பரை அறங்காவலர்கள் நிர்வகிக்கும் பழமையான கோயிலில் செப்பு தகடு முதல் பூஜை தட்டு வரை எடைக்கு எடை போட்டு லட்சக்கணக்கில் சுருட்டியது வௌிச்சத்திற்கு வந்திருக்கிறதே...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மஞ்சள் நகரில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பழமையான கோயில் ஒன்னு இருக்கு.. அறநிலையத்துறையின் கீழ் கோயில் இருந்தாலும் பரம்பரை அறங்காவலர்கள்தான் கோயிலை நிர்வகிச்சிட்டு வர்றாங்க.. பழமையான கோயில் என்பதால் புனரமைப்பு வேலை செஞ்சு கும்பாபிஷேகம் நடத்தணும்னு பக்தர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வெச்சாங்களாம்.. இதையடுத்து, புனரமைப்பு வேலை செய்ய அரசு அனுமதி கொடுத்து, போதுமான நிதியையும் ஒதுக்கியுள்ளது.. வேலை தீவிரமாக நடந்துகிட்டு இருந்த நிலையில், கோயில் கதவு நிலவில் தங்க முலாம் பூசப்பட்ட செப்பு தகடு திடீர்னு காணாம போயிருச்சு.. இதனால ஷாக் ஆன பக்தர்கள் அங்கு வேலை செய்யற ஆட்கள்கிட்ட விசாரிச்சிருக்காங்க... பரம்பரையா நிர்வகிச்சிட்டு வந்தவங்கதான் கைவரிசை காட்டி இருக்காங்கன்னு தெரிஞ்சிருக்கு.... சரி, அந்த செப்பு தகடு இப்ப எங்க இருக்குன்னு விசாரிச்சப்ப, திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் இருக்கிற ஒரு கடையில எடைக்கு போட்டது தெரிஞ்சிருக்கு... எடைக்கு போட்ட கடைக்கு போய் நேரில் பார்க்கிறப்ப அந்த கடையில கோயில் செப்பு தகடு மட்டுமல்லாமல், கோயில் கோபுர கலசம், மணி, பூஜை தட்டுகள், செம்பு குடம், சூலம் என எல்லாமே எடைக்கு போட்டு, லட்சக்கணக்கில் பணம் சுருட்டியது தெரியவந்துருக்கு.. இந்த பொருட்களை எல்லாம் வீடியோ எடுத்த பக்தர்கள், உயர் அதிகாரிக்கு ஆதாரத்துடன் புகார் கொடுத்தாங்க... ஆனால், நடவடிக்கை இல்லை. போலீசில் பெயரளவுக்கு ஒரு சிஎஸ்ஆர் மட்டும் பதிவுசெய்து கணக்கு முடிச்சிட்டாங்களாம்.. இந்த சுருட்டலுக்கு துணையாக, தாமரைக்கட்சி நிர்வாகிகள் சிலர் இருக்கிறார்களாம்...’’ என முடித்தார் விக்கியானந்தா.