நடிப்பதற்கு காதல் கணவன் முட்டுக்கட்டை போட்டதால் விபரீதம் பிரபல சின்னத்திரை நடிகை மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை: செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை
சென்னை: பிரபல சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி அதிகளவில் ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை பிராட்வே தாயப்பன் முதலி தெருவை சேர்ந்தவர் சதீஷ் (40). இவர் ராஜேஸ்வரி (39) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சதீஷ் தனியார் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஹேமந்த் என்ற மகனும் தணி என்ற மகளும் உள்ளனர். மகன் ஹேமந்த் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மகள் தணி 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
ராஜேஸ்வரிக்கு நடிகையாக வரவேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் அம்மா மற்றும் தோழி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சின்னத்திரை நடிகைகள் மத்தியில் ராஜேஸ்வரி பிரபலமாக வலம் வந்தார். இவரது நடிப்பை பார்த்து பல தொடர்களிலும் நடிக்க வாய்ப்பு குவிந்தது. தொடர்களில் நடிக்க வேண்டி இருந்ததால், ராஜேஸ்வரி குடும்பத்தை கவனிக்காமல் அடிக்கடி ஷூட்டிங்கிற்கு சென்று வந்துள்ளார். இது அவரது காதல் கணவரான சதீசுக்கு பிடிக்கவில்லை.
மகன் ஹேமந்த் மற்றும் நானும் வேலைக்கு செல்கிறேன். இனி நீ குடும்பத்திற்காக கஷ்டப்பட்டு நடிக்க வேண்டாம் என்று அவரது கணவர் சதீஷ் கூறியுள்ளார். ஆனால் சிறு வயதில் இருந்து நடிக்க வேண்டிய லட்சியத்தில் ராஜேஸ்வரி உறுதியாக இருந்தார். இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதேநேரம் பள்ளிக்கு செல்லும் மகளை கவனிக்க வேண்டியது இருப்பதால் இனி நடிக்க கூடாது என்று கணவர் ராஜேஸ்வரியிடம் உறுதியாக கூறிவிட்டதாக கூறப்படுகிறது.
அதேநேரம் ராஜேஸ்வரி நடிப்பது ‘மெகா தொடர்’ என்பதால் அதிலிருந்து பாதியில் வெளியேற முடியாது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கடந்த ஒரு மாதமாக ராஜேஸ்வரி குழப்பத்தில் இருந்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த 7ம் தேதி இரவு கணவருக்கும் ராஜேஸ்வரிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மனமுடைந்த ராஜேஸ்வரி கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு சைதாப்பேட்டை விஜிபி சாலையில் உள்ள தாய் வீட்டிற்கு கடந்த 8ம் தேதி வந்துவிட்டார். பிறகு கடந்த 3 நாட்களாக ராஜேஸ்வரி தாய் வீட்டில் கூட யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார்.
பின்னர் நேற்று முன்தினம் இரவு ராஜேஸ்வரி செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார். அப்போது, தனது தாய் சாப்பிடும் ரத்த அழுத்த (பிபி) மாத்திரையை அதிகளவில் ராஜேஸ்வரி சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மாத்திரைகள் சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரது பெற்றோர் அலறி அடித்துக்கொண்டு ராஜேஸ்வரியை மீட்டு கிண்டியில் உள்ள கலைஞர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் ராஜேஸ்வரிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அப்போதும் அவர் சுயநினைவில் இருந்து திரும்பாததால், டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.
அதன்படி அவரது குடும்பத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ராஜேஸ்வரியை அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி நேற்று காலை உயிரிழந்தார். பின்னர் நடிகை தற்கொலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின்படி, சைதாப்பேட்டை போலீசார் தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து நடிகையின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னத்திரை நடிகை ஒருவர் ரத்த அழுத்த மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


