Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலை: துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் மீண்டும் சர்ச்சை பேச்சு

ஊட்டி: ஊட்டி ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவர் எம்.ஜெகதீஷ்குமார் முன்னிலை வகித்தார். மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: 2021ல் நான் ஆளுநராக பொறுப்பேற்ற போது, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. சில பிரச்னைகள் இருந்தன. ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் மற்ற பல்கலைக்கழகங்களுடன் தொடர்பின்றி தனித்தனியாக செயல்பட்டு வந்தன. அவைகளின் தரமும் குறைந்து காணப்பட்டது. இதனை சரி செய்து, ஒன்றிணைக்கவே இந்த மாநாடு மூன்றாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. புதிய தேசிய கல்வி கொள்கை தான் எதிர்காலம். நமது நாடு தற்போது பெரிய மாற்றத்திற்கு தயாராக உள்ளது. உலகம் வேகமாக மாறிவரும் நிலையில் நாம் பின் தங்கி உள்ளோம். சுதந்திரத்திற்கு பிறகு பொருளாதார நிலையில் 5ம் இடத்தில் இருந்த நாம் 11ம் இடத்திற்கு பின்தங்கி விட்டோம். தற்போது 5ம் இடத்திற்கு முன்னேறி உள்ளோம். விரைவில் 3ம் இடத்திற்கு முன்னேற உள்ளோம். தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள், வேலைக்காக கையேந்தும் நிலையில் உள்ளனர்.

கல்வி இளைஞர்களை திறன் மிக்கவர்களாகவும், தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் உருவாக்க வேண்டும். ஆனால் அதை தவறவிட்டு விட்டோம். இது தொடர்ந்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.

நாம் சுதந்திரத்திற்கு முன்பு உலகின் பெரும் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக இருந்தோம். இதற்கு காரணம் அப்போது பின்பற்றப்பட்ட கல்வி கொள்கை. திருவள்ளுவரின் ‘கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற கூற்றின்படி கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்திட பாடுபட வேண்டும். இந்தியாவில், பழைய கல்வி முறையை மாற்றிட புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் நீண்ட நீடித்த கல்விக் கொள்கையை கொண்டு வர வேண்டும். புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும். இவ்வாறு அவர் பேசினார். ஏற்கனவே புதிய கல்விக்கொள்கை குறித்து ஆளுநர் பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில் மீண்டும் அதே கருத்தை தெரிவித்துள்ளார். மாநாட்டில் 19 பல்கலை. துணைவேந்தர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினர்.