Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஏழை மாணவர்கள் பங்கேற்க முடியாத வகையில் தேர்வு இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் நுழைவுத்தேர்வை எதிர்த்து வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவன் எஸ்.சித்தார்த் சார்பில் அவரது தந்தை எம்.சதீஷ்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கடல்சார் கல்விக்காக 160 கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 15 கல்வி நிலையங்கள் உள்ளன. இந்த படிப்புகளில் தமிழகத்தில் 3 ஆயிரம் இடங்களும் நாடு முழுவதும் 7000 இடங்களும் உள்ளன. கடந்த ஏப்ரல் 21ம் தேதி பிடெக் மெரைன் இன்ஜினியர், பிஎஸ்சி நாட்டிக்கல் சயின்ஸ், டிப்ளமோ இன் நாட்டிக்கல் சயின்ஸ் படிப்புகளுக்கான அறிவிப்பு வெளியானது.

அந்த அறிவிப்பு விளம்பரத்தில் முழு தகவல்களும் இல்லாததால் ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது குறித்த தெளிவான தகவல் அறிவிப்பில் இல்லை. வேண்டுமென்றே அடித்தட்டு மாணவர்கள் இந்த படிப்பில் சேர்ந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், திடீரென்று ஜூன் 8ம் தேதி தேர்வு கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மூலம் இந்த தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

இது கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு சாத்தியமானதாக இல்லை. தேர்வில் 47 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இவர்களில் தோராயமாக 14,000 பேரின் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்ற பொது நுழைவு தேர்வால் ஏழை மாணவர்களுக்கு கடல்சார் படிப்பும், கப்பல் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, விதிமுறைகளுக்கு முரணாக நடத்தப்பட்டுள்ள கடல்சார் கல்விக்கான பொது நுழைவு தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும்.

கடந்த 8ம் தேதி நடந்த நுழைவு தேர்வை ரத்து செய்து உரிய வழிமுறைகளை அமைத்து தேர்வை நடத்துமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி ஆஜராகி, தமிழக மாணவர்களுக்கு கடல்சார் படிப்புகளில் வாய்ப்பு கிடைத்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே இந்த தேர்வு நடத்தப்பட்டுள்ளது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.