Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏழை, பணக்காரர் வித்தியாசம் இன்றி 14 லட்சம் உடல்களை சுமந்து சென்ற இலவச அமரர் ஊர்தி வாகனங்கள்: ஊருக்கே கொண்டு சென்று உறவினர்களிடம் சேர்க்கும் சேவை தொடர்கிறது

சென்னை: தமிழக அரசின் இலவச அமரர் ஊர்தி சேவை மூலம் இதுவரை கிட்டத்தட்ட 14 லட்சம் உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு இலவசமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் சிகிச்சைக்காகவும், மேல் சிகிச்சைக்காகவும் சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற பெரிய நகரங்களுக்கு செல்கின்றனர். அப்போது சிகிச்சை பலனின்றி இறப்பவர்களின் உடலை அவர்களின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல பல சிரமங்கள் ஏற்படுகிறது. குறிப்பாக ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து செல்ல பல்லாயிரம் ரூபாய் செலவாகிகிறது.

இது போன்ற மக்களுக்கு அரசு சார்பில் தொடங்கப்பட்ட இலவச அமரர் ஊர்திகள் மிகவும் உதவியாக இருந்து வருகிறது. சராசரியாக ஆண்டுக்கு 1 லட்சம் உடல்கள் இந்த இலவச அமரர் ஊர்தி சேவை மூலம் சொந்த ஊர்களுக்கு இலவசமாக கொண்டு செல்லப்படுகிறது.இந்த அரசு இலவச அமரர் வாகனம் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் 2011 ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் 194 அமரர் ஊர்தி வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. ‘155377’ என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைத்து, எந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற தகவலைத் தெரிவித்தால் போதும். ஊர்திகள் இருக்கிற மருத்துவமனை என்றால், உடனடியாக வண்டி ஏற்பாடு செய்து தரப்படும்.

ஊர்தி இல்லாத மருத்துவமனையென்றால், அருகில் ஊர்திகள் இருக்கும் மருத்துவமனைகளில் இருந்து வரவழைக்கப்பட்டு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். தமிழ்நாடு இலவச அமரர் ஊர்தி வாகனம் இதுவரை 13 லட்சத்து 98 ஆயிரத்து 556 உடல்களை சுமந்துச் சென்றுள்ளது. கொரோனா காலத்தில் இறப்புகள் அதிகம் இருந்தபோதும் ஏழைப் பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் உடல்களை சுமந்து சென்ற அரசின் அமரர் ஊர்திகள், கடந்தாண்டில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 320 உடல்களையும், நடப்பாண்டில் ஜூலை மாதம் வரையில் 39 ஆயிரத்து 840 உடல்களையும் சுமந்து சென்றுள்ளன. தமிழ்நாடு மட்டுமின்றி மாநில எல்லை பகுதியில் 100 கி.மீ தூரத்திற்கு இலவசமாக உடலை எடுத்துச் செல்ல இந்த இலவச அமரர் ஊர்தி மிகவும் உதவியாக இருந்து வருகிறது.

* தமிழ்நாட்டில் இலவச அமரர் ஊர்தி வாகனம் இறந்தவர்களின் உடலை சுமந்துச் சென்ற எண்ணிக்கை

2019-20 115936

2020-21 129837

2021-22 177559

2022-23 148495

2023-24 151320

2024-25 ஆண்டில் ஜூலை மாதம் வரையில் 39840 உடல்கள் என 13 லட்சத்து 98 ஆயிரத்து 556 இறந்தவர்களின் உடலை மருத்துவமனையில் இருந்து அவர்களின் ஊருக்கு கொண்டு சென்று உறவினர்களிடம் சேவை மனப்பான்மையுடன் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.