சென்னை: பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கேற்ப, தமிழ்நாட்டில் மாற்றம் மலர்ந்து மக்களுக்கு வழி பிறக்கட்டும், இல்லங்கள் தோறும் இன்பங்கள் பெருகட்டும், தீமைகள் அகன்று நன்மைகள் செழிக்கட்டும். கே.எஸ்.அழகிரி(தமிழக காங்கிரஸ் தலைவர்): இனம், மண், மக்கள், விளைச்சல், உணவு இவை அனைத்துக்கும் சேர்த்துக் கொண்டாடும் ஒற்றை விழா தான் பொங்கல் பெருவிழா. அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவட்டும். ராமதாஸ்(பாமக நிறுவனர்): தைத்திருநாளும், தமிழ்புத்தாண்டும் தமிழர் வாழ்வில் மகிழ்ச்சியை உருவாக்கட்டும். அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை செழிக்க வேண்டும். வைகோ(மதிமுக பொது செயலாளர்): ஏழை எளியோருக்கு, நலிந்த மக்களுக்கு நம்மால் ஆன உதவிகளை வழக்கம் போல வழங்கிடுங்கள். இனிக்கும் பொங்கலை அனைவருக்கும் வழங்கி, பொங்கலோ பொங்கல் என்று வாழ்த்தி மகிழுங்கள். கமல்ஹாசன்: (மக்கள் நீதி மய்யம் தலைவர்) இயற்கையை வாழ்த்தும் நாள், உழைப்பில் உதவும் சக உயிர்களுக்கு நன்றி சொல்லும் நாள், சாதி மத பேதமின்றி தமிழர் கூடிக்கொண்டாடும் நாள் என்று, மகிழ்வுகளை அள்ளி வரும் தைப்பொங்கல் நாளில் வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்புமணி (பாமக தலைவர்): தைத் திருநாள் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வளர்ச்சியைக் கொடுக்க வேண்டும். அதற்காக உழைக்க இந்த தைத்திருநாளில் தமிழர்களாகிய நாம் அனைவரும் இயற்கையின் முன் உறுதியேற்றுக் கொள்வோம். திருமாவளவன்(விசிக தலைவர்): தமிழ்ச் சமூகத்தினரால் மட்டுமே பூரிப்புப் பொங்க கொண்டாடப்படும் பெருநாள் என்றாலும், இது விவசாயப்பெருங்குடி மக்களின் விளைச்சல் திருநாளே ஆகும். அதாவது, வேளாண் தொழிலைப் போற்றும் திருவிழாவாகும். ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்): தை மாதம் பிறந்து தமிழர்கள், விவசாயிகள் வாழ்வில் கடந்த காலத்தில் ஏற்பட்ட துன்பங்கள், துயரங்கள், இழப்புகள், பாதிப்புகள் எல்லாம் மறைந்து புத்தொளி பிறந்து நல்வழி பிறக்கட்டும்.
கே.பாலகிருஷ்ணன்(சிபிஎம் மாநில செயலாளர்): பொங்கல் திருநாள் உழைப்பின் உன்னதத்தை உயர்த்தி பிடிக்கிற சிறப்புமிக்க பண்டிகை. இந்த நன்னாளில் மக்கள் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்திட அனைவரும் உறுதியேற்போம். பொன்குமார்(தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி தலைவர்): தமிழ்ப் புத்தாண்டும் தமிழர் திருநாளாம் பொங்கலும் புது நம்பிக்கையோடு பிறக்கிறது. எல்லாருடைய வாழ்க்கையிலும் இன்பம் பொங்கிடட்டும். பிரசிடெண்ட் அபூபக்கர்(இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர்): உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். உலகம் முழுக்க வாழும் அனைத்து தமிழர்கள் வாழ்விலும் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கட்டும்.