பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே நேற்று மத்திய கயிறு வாரியம் சார்பில் சிறு, குறு நடுத்தரதொழில் முனைவோர்கள் மற்றும் தென்னை நார் தொழிற்சாலைகள் உரிமையாளர்கள், ஏற்றுமதியாளர்களின் தென்னை நார் தொழில்துறை கூட்டம் நடைபெற்றது. இதற்கு, ஒன்றிய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜே தலைமை தாங்கினார்.
தென்னை நார் வாரியத் தலைவர் ஸ்ரீ விபுல் கோயல், செயலாளர் ஸ்ரீ அருண்ஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழகம் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான தென்னை நார் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் தென்னை நார் கூட்டுக்குழும நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசுகையில், ‘‘தென்னை நார் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கும் ஒரு முக்கிய தளமாக செயல்படும் தென்னை நார் தொழில்துறை கூட்டத்தை ஏற்பாடு செய்வதில் வாரியத்தின் அர்ப்பணிப்பு முயற்சி பெரும் பங்கு வகிக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக எம்எஸ்எம்இ செயல்படுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% க்கும் அதிகமாகவும், ஏற்றுமதியில் 45% க்கும் அதிகமாகவும், ரூ.28 கோடிக்கும் அதிகமான மக்களை வேலைக்கு அமர்த்துவதிலும் இந்த துறை முக்கிய பங்கு வகிக்கிறது. தென்னை நார் துறை அடிமட்ட தொழில்முனைவோரை ஆதரிக்கிறது. மேலும் நிலையான வாழ்வாதாரங்களை வழங்குவதில் தென்னை நார்த் துறை சிறந்து விளங்குகிறது’’ என்றார்.
பின்னர் மத்திய இணை அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் 8 ஆயிரம் காயர் தொழிற்சாலைகள் உள்ளனர். நார் தொழிற்சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தென்னையில் இருந்து பல்வேறு பொருட்கள் கிடைக்கிறது.
காயர் தொழிலை மேம்படுத்த கூட்டுக்குடும்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தென்னை நார் தொழில் மேம்படுத்த பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பொள்ளாச்சியில் கயிறு வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். தென்னை நார் தொழில் மேம்படுத்த திறன் மேம்படுத்த பயிற்சி வழங்கப்படும்’’ என தெரிவித்தார்.