திருமலை: புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் ரேவதி உயிரிழந்தார். இந்நிலையில் படுகாயமடைந்து ஐதராபாத் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது மகன் ஸ்ரீ தேஜ்ஜை பார்க்க அல்லு அர்ஜுன் அனுமதி கேட்டிருந்தார். இதற்கு போலீசார் நோட்டீஸ் வழங்கினர். அதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீ தேஜை காண வந்தால் அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், மருத்துவமனை நிர்வாகத்துக்கும் சிரமத்தை ஏற்படுத்தும். இருப்பினும் நீங்கள் செல்ல விரும்பினால் காவல் நிலையத்துக்கும், மருத்துவமனைக்கும் முன்கூட்டியே தெரிவித்தால் வந்து செல்லும் வழித்தடத்தை ரகசியமாக வைத்து அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நீங்கள் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் வீட்டில் தூங்கி கொண்டிருந்ததால் அவரது மேலாளர் மூர்த்தியிடம் போலீசார் நோட்டீஸ் கொடுத்து சென்றனர். இந்நிலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் வழங்கிய ஜாமினில் நிபந்தனை உள்ளது. இதனால் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்திற்கு நேற்று சென்று கையெழுத்திட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இனி காவல் நிலையம் சென்று கையெழுத்திட உள்ளார்.


