Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

போனில் கூகுள் டைம் லைனை அழித்து விட்டு எஸ்கேப் ஆக பார்த்த டாக்டர் தொக்காக தூக்கிய போலீஸ்

சென்னை: கொடுங்கையூர் இளம்பெண் கொலையில் சாதுரியம் காட்டிய டாக்டரை விட்டுப் பிடித்துள்ளனர் போலீசார். விசாரணையின்போது, செல்போனில் கூகுள் டைம் லைனை அவசர அவசரமாக வாங்கி அழித்துவிட்டு கொடுத்த மறு நிமிடமே போலீசார் டாக்டர் தான் குற்றவாளி என்பதை உறுதி செய்து, தட்டித் தூக்கிய பரபரப்பு தகவல்கள் தெரிய வந்துள்ளது. சென்னை கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி ஐந்தாவது தெருவில் வசித்து வந்த நித்யா என்கிற நித்ய (26) என்பவர் கடந்த 5ம் தேதி மாலை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இவர் லிவிங் டுகெதர் முறையில் பாலமுருகன் என்பவருடன் வாழ்ந்து வந்தார். இதனால் பாலமுருகனை முதலில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவருக்கு இந்த கொலையில் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்தது. மேலும், நித்யா வீட்டில் இருந்த 25 சவரன் நகைகள் காணாமல் போனதால் போலீசார் குழப்பம் அடைந்தனர்.

எனவே, நித்யா கடைசியாக தனது செல்போனில் பேசிய டாக்டர் சந்தோஷ்குமாரை அழைத்து விசாரித்த போது அவர் ஏற்கனவே தான் நித்யாவுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டோம் எனவும் கூறியுள்ளார். மற்றபடி நித்யாவுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறி உள்ளார்.

இந்நிலையில், புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார், டாக்டர் சந்தோஷ்குமாரின் செல்போனை வாங்கி கூகுள் டைம் லைனை பார்த்துள்ளார். அதில் அவர் கொடுங்கையூர் பகுதிக்கு வந்து சென்றதற்கான ஆதாரம் இருந்துள்ளது. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக அவர் சைதாப்பேட்டையில் இருந்ததாக கூறியுள்ளார். இருப்பினும் இதுபற்றி போலீசார் சந்தோஷ்குமாரிடம் எதையும் கேட்கவில்லை. அதன்பிறகு அவசர அவசரமாக டாக்டர் சந்தோஷ் குமார் ஒருவருக்கு போன் செய்ய வேண்டும் என போலீசாரிடம் இருந்து போனை வாங்கி காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது கூகுள் டைம் லைன் பகுதிக்குச் சென்று அவர் எங்கெங்கு சென்றார் என்ற விவரங்களை அழித்துவிட்டு மீண்டும் செல்போனை போலீசாரிடம் கொடுத்துள்ளார்.

போலீசார் மீண்டும் கூகுள் டைம் லைனுக்கு சென்று பார்த்தபோது அதில் எந்த விவரங்களும் இல்லாமல் கிளியர் என்று இருந்தது. இதனால் அப்போதே போலீசார், டாக்டர்தான் ஏதோ செய்துள்ளார் என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது சந்தோஷ் குமார் வந்து சென்றதற்கான அடையாளங்கள் இருந்தன.

இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு சந்தோஷ்குமாரின் வீட்டிற்கே சென்று தூங்கிக் கொண்டிருந்த அவரை தூக்கிக்கொண்டு வந்தனர். அதன் பிறகு கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் தங்களிடம் இருந்த ஆதாரங்களை காண்பித்தனர். அப்போதும் சந்தோஷ்குமார் நான் வந்தது, நித்யாவுடன் இருந்தது உண்மைதான். ஆனால் நான் கொலை செய்யவில்லை எனக் கூறியுள்ளார். போலீசார் அவரை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது சந்தோஷ்குமார் எந்த ஒரு இடத்தையும் தொடாமல் மிகவும் சாதுர்யமாக நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் தங்களது ஸ்டைலை காட்ட டாக்டர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஒரு போலீஸ்காரரை நித்யா போன்று படுக்க வைத்து, எப்படி கொலை செய்தார் என்பதை தத்ரூபமாக டாக்டர் நடித்து காட்டினார். நித்யா உயிரிழந்தவுடன் அவரது இதயத்துடிப்பு நின்று விட்டதா என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டு அவரை தரதரவென இழுத்து லாக்கர் அருகில் கொண்டு சென்று அவரது கைவிரலை வைத்து லாக்கரை திறந்து நகைகளை எடுத்துச் சென்றுள்ளார்.

மசாஜ் செய்துகொண்டே இருக்கும்போதே, தலையணையால் முகத்தை அழுத்தி நித்யாவை கொன்றார் டாக்டர் சந்தோஷ்குமார். கொலை செய்யப்பட்டு கிடந்தபோது, நித்யா முழு நிர்வாணமாக இருந்தார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதால், அவருக்கு உடைகளை அணிவித்துள்ளார் டாக்டர். அதற்குப் பின் பக்கத்தில் ஒரு கிளாசில் மது மற்றும் இரண்டு வகை தூக்க மாத்திரைகளை பொடி செய்து வைத்துள்ளார். இதற்கிடையே, டாக்டர் சந்தோஷ்குமாருக்கு கையில் காயம் இருந்தது. அது எப்படி வந்தது என போலீசார் கேட்கும்போது வேலையில் இருக்கும்போது அடிபட்டுவிட்டது என கூறியுள்ளார். நித்யாவை பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர், நித்யாவிற்கு உடம்பில் எந்த ஒரு காயமும் இல்லை. ஆனால் முன்பகுதி பல் பாதி உடைந்து உதடு மட்டும் காயமாக உள்ளது எனக் கூறியுள்ளார். இதனையும் போலீசார் பொருத்தி பார்த்துள்ளனர். நித்யாவை கொலை செய்யும்போது டாக்டரை நித்யா கடித்துள்ளார். இதனால் நித்யாவிற்கு பல் உடைந்து உதட்டில் காயம் ஏற்பட்டதும் பிறகு போலீசாருக்கு தெரிய வந்தது. எந்த ஒரு தற்கொலையாக இருந்தாலும்கூட அதை கொலை என்ற கண்ணோட்டத்துடன் விசாரிக்கும் போலீசார் இந்த வழக்கையும் மிக சாதுரியமாக கையாண்டு டாக்டரை கைது செய்து மொத்த நகைகளையும் மீட்டுள்ளனர்.