பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
ஆழியார் அணையை சுற்றி பார்க்க வரும் பயணிகள் பலர், தடை விதிக்கப்பட்ட பகுதி என தெரியாமல் ஆற்றோரம் உள்ள பாலத்தின் கீழ் பகுதி மற்றும் அணையை ஒட்டியுள்ள இடங்களில் குளிக்கின்றனர். ஆழமான பகுதி மற்றும் மணல் நிறைந்த சேற்று பகுதியாக இருப்பதால் உயிர்பலி ஏற்படுகிறது.
ஆழியாற்றில் அடிக்கடி உயிர்ப்பலி ஏற்படுவதால், அதனை தடுக்க போலீசார் மற்றும் பொதுப்பணித்துறையினர் அப்பகுதியில் சுமார் 3 மாதத்திற்கு முன்பு 6இடங்களில் எச்சரிக்கை பலகை வைத்தனர்.
ஆனால், அந்த எச்சரிக்கை போர்டுகள், பலத்த காற்றுக்கும், மழைக்கும் சேதமாகி காணாமல் போயுள்ளது.இதையடுத்து, தடையை மீறி சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க பொதுப்பணித்துறையினர் கண்காணிப்புபணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தற்போது ஆழியார் அணையின் நீர் மட்டம் 118 அடியாக உயர்ந்து அணையை சுற்றியுள்ள பகுதியில் தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. இதனால், விடுமுறை நாட்கள் மட்டுமின்றி, பிற நாட்களிலும் தடையை மீறி சுற்றுலா பயணிகள் யாரேனும் தடுப்பணை பகுதியில் இறங்கி குளிக்கின்றனரா என கண்காணிக்கின்றனர்.
அதிலும், ஆழியார் அறிவுத்திருக்கோயில் எதிரே உள்ள பகுதியில், தடையை மீறி செல்பவர்களை எச்சரித்து அனுப்புகின்றனர். மேலும், ஆழியார் அணை பகுதி, தடுப்பணை பகுதி, கவியருவிக்கு செல்லும் வழி என பல்வேறு இடங்களில் ஆங்காங்கே போலீசார் நின்று தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.


