Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இழிவுபடுத்தினால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது தலைவர் பதவி கொடுத்தது குழந்தை ராமதாஸ்தான்: அன்புமணிக்கு பாமக எம்எல்ஏ கண்டனம்

சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏவும், பாமக இணை பொது செயலாளருமான அருள், சேலத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்த நாட்டை ஆண்ட முன்னாள், இன்னாள் முதல்வர்கள், பிரதமர்கள் உள்பட பல்வேறு தலைவர்கள், ராமதாசை பற்றி எல்லாம் சொல்லாத, சொல்ல தயங்கிய வார்த்தைகளை, இன்று அன்புமணி சொல்லி இருப்பது எங்களுக்கு உச்சக்கட்ட மனவேதனையை அளித்துள்ளது. ராமதாஸ் அய்யாவாக இல்லை. குழந்தை போல் மாறிவிட்டார். 3 தீயசக்திகள் ராமதாசை ஆட்டி வைக்கிறார்கள் என்று அன்புமணி சொல்கிறார். பொறுப்பாளர்களாக கொலைகாரன், கொள்ளைக்காரன், ேராட்டில் இலந்தை பழத்தை விற்பவர்களை எல்லாம் கொண்டு வந்து நியமனம் செய்கிறார்கள். அனைத்து அதிகாரமும் எனக்கே என்று கூறுகிறார். செல்வப்பெருந்தகை, திருமாவளவன் உள்ளிட்டவர்களுக்கு ராமதாஸ் மீது என்ன அக்கறை? என்பது உள்பட இன்னும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சொல்லி இருக்கிறார். ராமதாஸ் என்கிற அந்த குழந்தை தான், மூன்று வருடத்திற்கு முன்பு உங்களை தலைவராக நியமித்தது. அது மட்டும் எப்படி செல்லும். நான் ராமதாசுடன் 36 ஆண்டாக பயணிக்கிறேன். ராமதாசுக்கு இழிவு ஏற்படும் போது, என்னால் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது. தெருவில் இலந்தை பழம் விற்பவன் கேவலமானவனா? அவனும் ஒரு பட்டாளி தான். அன்புமணி பாட்டாளி வர்த்தகத்தை அவமானப்படுத்துகிறார்.

வன்னியர் சங்கத்தை 1980ம் ஆண்டு ராமதாஸ் தொடங்கிய போது, அன்புமணிக்கு 12 வயது தான். பாமக என்ற இயக்கத்தை தொடங்கும்போது அவருக்கு 21 வயது. மற்ற கட்சிகளை போல், பாமகவுக்கு தாய் இயக்கம் கிடையாது. ராமதாஸ் தான் தாய்.

ராமதாஸ் சுயம்புவாக பெற்று எடுத்த குழந்தை தான் பாமக. பாமக தலைவராக ஜி.கே.மணி 25 ஆண்டுகளாக இருந்தார். பின்னர், அன்புமணியை பாமக தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் கூறிய போது, அதை புன்னகையோடு முன்ெமாழிந்தவர் ஜி.கே.மணி. ஆனால், இன்று அவர் படுகிற அவமானம் ஏராளம். ராமதாசுடன் யார், யார் இணைகிறார்களோ, அவர்களை முகநூலில் தாக்குவதற்காக ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. இன்றைக்கு ராமதாஸ் தான் தலைவர். அதற்கு அடுத்தபடியாக நீங்கள் தான் தலைவர். நாங்கள் ராமதாசை பார்த்து அரசியலுக்கு வந்தோம். நேற்று வரை நாங்கள் நல்லவர்கள். இன்றைக்கு கெட்டவர்களா?. ஓட்டு போடும் வன்னிய மக்களும், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள், ராமதாஸ் பின்னால் தானே இருக்கிறார்கள். வாக்காளர்கள் இல்லாமல் நிர்வாகிகளை மட்டும் வைத்து என்ன செய்ய முடியும்?.

அன்புமணியை மன்றாடி கேட்டுகொள்கிறோம். தயவு செய்து பத்து நாட்களுக்கு உங்களிடம் இருக்கும் ஆட்களை எல்லாம் விட்டு விட்டு, நீங்கள் சுயமாக சிந்தியுங்கள். தைலாபுரம் வந்து ராமதாசை சந்திக்க வேண்டும். அவரிடம் பேசி விட்டு, அங்கு ஒரு ேபட்டி கொடுக்க வேண்டும். பாமக தலைவர்களாக இருந்த பேராசிரியர் தீரன், ஜி.கே.மணி ஆகியோர் ராமதாசுக்கு கட்டுப்பட்டு இருந்தார்கள். இப்போது, நிறுவனருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று புதியதாக விதி எழுதப்படுகிறது. அது தவறாகும். இந்த பிரச்னை தந்தை, மகன் பிரச்னை அல்ல. கட்சியின் நிர்வாக பிரச்னையாகும். கட்சியின் நிர்வாக தலைமை ராமதாஸ் எடுக்கும் முடிவு தான் இறுதியானது. பாஜ கூட்டணியை அன்புமணி தான் முடிவு செய்தார். இறுதி நேரத்தில் ராமதாஸ் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதை தடுக்க முடியாமல் அவர் ஏற்றுக்கொண்டார். இதுதான் உண்மையாகும். இவ்வாறு அருள் கூறினார்.