சென்னை: அன்புமணியின் நடைபயணத்திற்கு விதிக்கப்பட்ட தடையை தடையை நீக்க கோரி, பாமக வழக்கறிஞர் பாலு, வடக்கு மண்டல ஐஜியிடம் மனு அளித்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி நேற்று முன்தினம் முதல் நடைபயணம் தொடங்கினார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், பாமக கட்சி கொடி, சின்னத்தை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என தடை விதித்தார். அன்புமணி நடைபயணத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அதன்பேரில், அன்புமணியின் நடைபயணத்துக்கு அனுமதி மறுத்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இந்த தடையை நீக்கி, மீண்டும் நடைபயணம் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, ஆலந்தூரில் உள்ள வடக்கு மண்டல ஐஜி அலுவலகத்தில், பாமக வழக்கறிஞர் பாலு நேற்று, ஐஜி அஸ்ரா கார்க்கை சந்தித்து மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாமக தலைவர் அன்புமணி தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை தொடங்கினார்.
மிக எழுச்சியாக, சிறப்பாக அந்த பயணம் தொடங்கியுள்ளது. இந்த பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டதை அறிந்து பாமகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, தடை விதிக்கப்பட்டது என செய்தி பரவியது. அது தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள், சட்டம் -ஒழுங்கு டிஜிபி மற்றும் வடக்கு மண்டல ஐஜி, தொடர்புடைய காவல் மாவட்ட கண்காணிப்பாளர்களிடம் பேசிய பிறகு, இது தடை விதிப்பதற்கான சுற்றறிக்கை அல்ல என தெரிவித்தார்கள்.
இந்த சுற்றுப்பயணத்திற்கு காவல்துறை தடை என்பது தவறான செய்தி. தொடர்புடைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உரிய உத்தரவை பிறப்பிப்பார்கள் என திட்டமிட்டபடி நடைபயணம் நடைபெறும். எந்த அசம்பாவிதமும் இல்லாமல் சுற்றுப்பயணம் நடைபெறும். பாமக தலைவராக அன்புமணி தொடர்கிறார். இது, பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட பதவியாகும்.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பாமகவுக்கு கொள்கை விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவொரு ஜனநாயக அமைப்பு. நிறுவனராக இருந்தாலும் கூட, எந்த தனிநபரும் ஒரு முடிவு எடுக்க வேண்டுமெனில் செயற்குழு, பொதுகுழு, உயர்மட்ட குழு எடுக்கும் முடிவு தான் இறுதியானது. அதன் அடிப்படையில் அன்புமணி தொடர்ந்து தலைவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.