திண்டிவனத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழு கூட்டம் துவங்கியது: அன்புமணி பெயர், படம் புறக்கணிப்பு
திண்டிவனம்: திண்டிவனம் ஓமந்தூரில் இன்று பாமக செயற்குழு கூட்டம் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. ஜி.கே.மணி. பு.தா அருள்மொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேடையில் வைக்கப்பட்ட பேனரில் ெசயல் தலைவர் அன்புமணி பெயரோ, படமோ இடம் பெறவில்லை. பாமகவில் தந்தை ராமதாசுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதலில் கட்சியை முழுமையாக கைப்பற்றும் நடவடிக்கையில் இருவரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு நிர்வாகிகளை நியமிப்பதும் நீக்குவதுமாக செயல்பட்டு வருகின்றனர். பொதுவெளியில் இருந்துவந்த மோதல் தற்போது சட்டசபை வரை சென்றுவிட்டது. கொறடா பதவியில் இருந்து அருள் எம்எல்ஏவை நீக்க வேண்டும் என சபாநாயகரிடம் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மனு கொடுத்தனர்.
ஆனால் அருளே எந்த பதவியில் தொடர்வார் என ராமதாஸ் அறிவித்தார். கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் பாமகவின் முக்கிய முடிவுகளை எடுக்கும் தலைமை நிர்வாக குழு கூட்டத்தை கடந்த 5ம் தேதி கூட்டிய ராமதாஸ் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்களை ஒட்டுமொத்தமாக நீக்கிவிட்டு தனது ஆதரவாளர்களுக்கு அந்த பதவியை கொடுத்தார். தொடர்ந்து கட்சியின் செயற்குழு கூட்டத்தையும் அவர் இன்று கூட்டி உள்ளார். திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் துவங்கியது. பாமக தலைமை நிலைய நிர்வாகிகள் கவுரவ தலைவர் ஜி.ேக.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி, பொதுச்செயலாளர் முரளி சங்கர், பொருளார் சையது மன்சூர் உசேன், துரை, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, திருக்கச்சூர் ஆறுமுகம், பேராசிரியர் தீரன், அருள் எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பாமக மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
செயற்குழு மேடையில் வைக்கப்பட்ட பேனரில் ராமதாஸ் படம் மட்டும் தான் இடம் பெற்றது. அன்புமணி பெயரோ படமோ இடம் பெறவில்லை. மாநாட்டில் தற்போது முக்கிய நிர்வாகிகள் பேசி வருகின்றனர். கடைசியில் ராமதாஸ் பேசிய பின் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. செயற்குழுவில் கலந்துகொண்டவர்களுக்கு மட்டன் பிரியாணியுடன் உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது.