திருப்பத்தூரில் விடுதியில் தங்கி படித்த பிளஸ் 1 மாணவன் பள்ளி கிணற்றில் சடலமாக மீட்பு: பெற்றோர், உறவினர்கள் மறியல்
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் பள்ளியில் உள்ள பூட்டிய கிணற்றில் காயங்களுடன் பிளஸ் 1 மாணவன் சடலமாக மீட்கப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன். இதில் கடைசி மகன் முகிலன்(15), திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 1 படித்து வந்தார். அவர் கடந்த 1ம் தேதி வகுப்புக்கு வராததால், ஆசிரியர்கள் பெற்றோரை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர் மகனை தேடி பள்ளி விடுதிக்கு வந்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால், திருப்பத்தூர் டவுன் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் பள்ளிக்கு வெளியே உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது, முகிலன் வெளியே செல்லவில்லை என்பது உறுதியானது. இந்நிலையில், மோப்ப நாய் பள்ளி வளாகத்திற்குள் உள்ள பாழடைந்த பூட்டிய கிணற்றின் அருகே சுற்றி வந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் கிணற்றில் பார்த்தனர்.
அதில் கிணற்றுக்குள் முகிலன் சடலமாக மிதப்பது தெரியவந்தது. கிரில் கம்பிகள் போட்டு மூடப்பட்டுள்ள கிணற்றின் ஒரு புறத்தில் மட்டும் சிறிய அளவில் திறந்த பகுதி இருந்தது. தீயணைப்பு மீட்பு படையினர் வந்து கிணற்றில் இறங்கி சடலத்தை மீட்டனர். மகன் சாவில் சந்தேகம் உள்ளதால் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யவேண்டும் எனக்கூறி பெற்றோர் போராட்டம் நடத்தினர். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தவெக கட்சியினர் சிலர் மறியலில் ஈடுபட்டனர். வேலூர் எஸ்பி மயில்வாகனன், திருப்பத்தூர் எஸ்பி சியாமளாதேவி ஆகியோர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர். இதனிடையே மாணவன் சாவு தொடர்பாக பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 4 பாதிரியார்கள் மற்றும் ஒரு ஆசிரியரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.