Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் தமிழகத்தில் மேலும் 10 புதிய சுங்கச்சாவடிகள்: விரைவில் திறப்பு, ஆர்டிஐ மூலம் அம்பலம்

மதுரை: தமிழ்நாட்டில் புதிதாக 10 இடங்களில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகள் அமைக்கும் பணி நடந்து வருவதாக ஆர்டிஐ மூலம் அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு சமூக ஆர்வலர் ஒருவர் பல்வேறு கேள்விகளை முன் வைத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு, ஆணையத்தின் பதில் வருமாறு:

தமிழ்நாட்டின் இரு மண்டலங்கள் உள்ளிட்ட இந்தியா முழுவதும் 26 இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை மண்டலங்களில், சுமார் 805 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் மதுரை மண்டலத்தின் கீழ் 28, சென்னை மண்டலத்தின் கீழ் 31 சுங்கச்சாவடிகள் என 59 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக புதிய சாலை விரிவாக்க பணிகள் நடக்கிறது.

மதுரை மண்டலத்தின் கீழ் உள்ள திட்ட இயக்குநர் அலுவலகங்கள் மூலம் மதுரை, திண்டுக்கல், காரைக்குடி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் 10 சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை திட்ட இயக்குநர் அலுவலகத்தின் கீழ் மதுரை மேலூர் முதல் காரைக்குடி வரை நான்கு வழிச்சாலையும், வாடிப்பட்டி முதல் தாமரைப்பட்டி வரை சுற்றுவட்டச் சாலையும் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்விரு இடங்களில் விரைவில் 2 புதிய சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.

இதேபோல் தஞ்சாவூர் திட்ட இயக்குநர் அலுவலகத்தின் கீழ், விக்கிரவாண்டி முதல் சேத்தியாத்தோப்பு வரை நான்கு வழிச்சாலையும், மருங்கூர் கிராமத்தில் சுங்கச்சாவடியும் அமைகிறது. சேத்தியாத்தோப்பு முதல் சோழபுரம் பகுதியில் நான்கு வழிச்சாலையும், மானப்பாடி கிராமத்தில் சுங்கச்சாவடியும் அமைகிறது. சோழபுரம் முதல் தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலையும், வேம்புக்குடி பகுதியில் சுங்கச்சாவடியும் அமைகிறது. நாகப்பட்டினம் முதல் தஞ்சாவூர் வரை இருவழிச்சாலை அமைக்க முடிவாகி, கோவில் வென்னி கிராமத்தில் சுங்கச்சாவடி அமைகிறது.

திண்டுக்கல் திட்ட இயக்குநர் அலுவலகத்தின் கீழ், திண்டுக்கல் முதல் தேனி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியும், சேவுகபட்டி பகுதியில் சுங்கச்சாவடியும் அமைகிறது. கமலாபுரம் முதல் ஒட்டன்சத்திரம் வரை தேசிய நெடுஞ்சாலையும், பாறைப்பட்டி பகுதியில் சுங்கச்சாவடியும், மடத்துக்குளம் முதல் பொள்ளாச்சி வரை நெடுஞ்சாலை அமைக்கும் பணியும், கோமங்கலம் புதூர் பகுதியில் சுங்கச்சாவடியும் அமைகிறது.

காரைக்குடி திட்ட இயக்குநர் அலுவலகத்தின் கீழ், திருச்சி தேசிய நெடுஞ்சாலை என்ஹெச்83 திட்டம் நடைபெற்று வருகிறது. துவாக்குடி பகுதியில் புதிய சுங்கச்சாவடி அமைகிறது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 59 சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், கூடுதலாக 10 சுங்கச்சாவடிகள் விரைவில் திறக்கப்பட இருப்பது தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தெரியவந்து, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், ஆர்டிஐ மூலம், தமிழகத்தில் உரிய விதிமுறைகளை பின்பற்றாத சுங்கச்சாவடிகள் மீது ஏதேனும் நடவடிக்கையில் எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு உரிய தகவல் இல்லையெனவும், 2 நிமிடங்களுக்கு மேல் நின்றால் வாகனங்களுக்கு இலவசமாக அனுமதிக்கப்பட வேண்டும் என விதி உள்ளதா? அது குறித்த உத்தரவுகள் உள்ளதா? என்ற தகவலுக்கும், அப்படி எந்த உத்தரவும் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்கக்கட்டணம் ஆண்டுக்கு இருமுறை சகட்டுமேனிக்கு உயர்த்தப்படும் நிலையில், இதை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வரும்போது மேலும் 10 சுங்கச்சாவடிகள் விரைவில் திறக்கப்படும் என்ற தகவல் பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியைத் தந்துள்ளது.