Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவு கொள்கை ஆவணங்கள் முதல்வரிடம் சமர்ப்பிப்பு: துணைத்தலைவர் ஜெயரஞ்சன் வழங்கினார்

சென்னை: மாநில திட்டக்குழுவின் செயல் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் நேற்று, மாநில திட்ட குழுவால் தயாரிக்கப்பட்ட 4 வரைவு கொள்கை ஆவணங்கள் மற்றும் 5 ஆய்வறிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சமர்ப்பித்தார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் மற்றும் மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத்தலைவர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் திட்டம் மற்றும் வளர்ச்சி துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா ஆகியோர் உடன் இருந்தனர்.

வரைவு கொள்கை ஆவண ஆய்வு அறிக்கையில் கூறி இருப்பதாவது:

* தமிழ்நாட்டின் நிலையான நில பயன்பாட்டு கொள்கையானது, நிலப்பரப்பை நகர்ப்புற வளர்ச்சிக்கான பகுதி, பாதுகாக்கப்பட வேண்டிய சுற்றுச்சூழலுக்கான பகுதி, வேளாண் நடவடிக்கைகளுக்கான விளைநில பகுதி என வகைப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வேளாண் நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கவும், விரைவாக நகரமயமாக்கும் பகுதிகளை வளர்க்கவும் அறிவுறுத்துகிறது.

* படித்த இளைஞர்களிடையே அதிக வேலையின்மை விகிதம், கல்வி, திறன் மேம்பாடு, உழைப்பிற்கான உத்வேகம் மற்றும் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றிற்கு இடையே உள்ள குறிப்பிடத்தக்க பொருத்தமற்ற தன்மை ஆகியன முக்கியமானவைகள் ஆகும்.

* அனைவருக்கும் சுத்தமான நீர் கிடைப்பதை உறுதி செய்யவும், நீர்வளங்களை பாதுகாத்து மேம்படுத்தவும், ஆக்கப்பூர்வமான நீர் பயன்பாட்டிற்காகவும் சிறப்பான உத்திகளை இக்கொள்கை எடுத்துரைக்கிறது.

* முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினால் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களிடம் ஏற்படும் தாக்கம் இந்த ஆய்வின் இரண்டாம் கட்ட இடைநிலை அறிக்கையாகும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் மாணவர்களின் கல்வி மற்றும் உடல்செயல்பாடுகளில் ஏற்பட்ட தாக்கம் குறித்து, ஜூன் மாதம் நடத்தப்பட்ட மதிப்பீட்டையும், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட அடிப்படை ஆய்வு மதிப்பீட்டையும் ஒப்பீட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை நடப்பு கல்வியாண்டில் புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் மதிப்பீட்டையும் உள்ளடக்கியுள்ளது.

* புதுமைப்பெண் திட்டத்தின் செயல்பாடு, சவால்கள், மாணவிகளின் விழிப்புணர்வு நிலை, திட்ட உதவியின் பயன்பாட்டு முறைகள், கல்லூரி மாணவியர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இடையே புதுமைப்பெண் திட்டம் ஏற்படுத்திய சமூக பொருளாதார தாக்கங்கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்வதாகும்.

* தமிழ்நாடு முழுவதும் உள்ள வெப்ப மண்டலங்களை கண்டறிந்து வெப்பப் பகுதிகளை அடையாளம் காணவும், நகரமயமாதலால் மற்றும் காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் வெப்பத்தின் தாக்கத்தை புரிந்து கொள்ளவும் உதவுகிறது. நகர்ப்புற வெப்ப தாக்கங்கள், தமிழ்நாட்டிற்கென வடிவமைக்கப்பட்ட செயல்படுத்தக் கூடிய தணிப்பு உத்திகள் மற்றும் நிலையான நகர்ப்புற திட்டமிடலை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

* தமிழ்நாட்டில் கோடைகாலமான மார்ச் முதல் ஆகஸ்ட் மாதங்களில் வெப்ப அலை வீச்சின் காரணமாக அதிகப்படியான வெயிலின் தாக்கத்தை சந்தித்து வருகிறது. மனிதர்களின் வாழ்விடங்களிலும், பணிபுரியும் அலுவலகம் தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களிலும் உடல் மற்றும் உள நலனுக்கு ஊறு விளைவிக்காத வகையில் வெப்பத்தணிப்பு செய்யப்பட வேண்டியது அவசியமானதாகும். மாநில திட்ட அறிக்கை குறுகிய, நடுத்தர நீண்டகால உத்திகளுடன், அரசு துறைகளில் பொறுப்புகள் மற்றும் பங்களிப்பு விவரங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

* முன்னோடி மக்கள் நல திட்டங்களின் மீதான மதிப்பிட்டாய்வுகளின் விவரம்...

1 முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினால் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களிடம் ஏற்படும் தாக்கம்.

2 புதுமைப்பெண் திட்டமதிப்பீடு.

3 எண்ணும் எழுத்தும் திட்டம் செயலாக்கத்தின் மீதான மதிப்பீடு.

4 நகர்ப்புற வெப்பத்தீவு தமிழ்நாட்டின் வெப்பப்பகுதிகளின் பகுப்பாய்வு மற்றும் தணிப்பு உத்திகள்.

5 தமிழ்நாடு வெப்பதணிப்பு அறிக்கை