Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வானியல் கோட்பாட்டை உருவாக்கிய இயற்பியல் விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகர்

விண்வெளி இயற்பியலில் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளோருக்கு, அண்டத்தின் பேரமைப்பு, அதிலுள்ள பால்வெளி, நட்சத்திரக் கூட்டங்கள், கருந்துளைகள், நட்சத்திரங்களின் மாற்றங்கள் தொடர்பான ரகசியங்களை வெளிப்படுத்தும் ஆர்வம் மிகுதி. அத்தகையோருக்கு வழிகாட்டும் அரிய விண்வெளிக் கோட்பாட்டை உருவாக்கி நோபல்பரிசு பெற்றவர், இந்தியாவில் பிறந்த விண்வெளி விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகர்.சுப்ரமணியன் சந்திரசேகர் அக்டோபர் 19, 1910 அன்று பிரிட்டிஷ் அரசின்கீழ் இருந்த இந்தியாவின் லாகூரில் சி. சுப்பிரமணியன் ஐயருக்கும் சீதாலட்சுமி அம்மையாருக்கும் முதல் மகனாகவும் மூன்றாவது குழந்தையாகவும் பிறந்தார்.

இவருடன் ஆறு சகோதரிகளும் (ராஜலட்சுமி, பாலபார்வதி, சாரதா, வித்யா, சாவித்திரி, சுந்தரி) மூன்று சகோதரர்களும் (விசுவநாதன், பாலகிருஷ்ணன், ராமநாதன்) கூடப் பிறந்தவர்கள். இவரின் தந்தை இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் அரசுப் பணியில் அதிகாரியாக இருந்தார். 1918ல் சுப்ரமணியன் சந்திரசேகரின் தந்தை சென்னைக்கு மாற்றப்பட்டார். லாகூரில் ஐந்து வருடங்களும், லக்னோவில் இரண்டு வருடங்களும் வாழ்ந்தபின், அவரது குடும்பம் சென்னை வந்தடைந்தது. அவரது ஆரம்பப் படிப்பு வீட்டில் தொடங்கியது. பதினோராம் வயதில் அவர் திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் மேல்நிலைப் படிப்பு முடிந்ததும், 1927-ல் இளங்கலை (B.A. Honours) இயற்பியல் படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தார்.

1928ல், ஆர்னோல்ட் சம்மர்ஃபெல்ட் (Arnold Sommerfeld) இந்தியா வந்திருந்தபோது, சென்னையில் மாநிலக் கல்லூரியில் சொற்பொழிவு ஆற்றினார். ஏற்கனவே அவருடைய புத்தகத்தைப் படித்திருந்த சந்திரசேகர், அவரைச் சந்தித்து இயற்பியலில் நிகழ்ந்திருந்த புதிய ஆராய்ச்சிகளைப் பற்றி அறிந்ததுடன், அவை பற்றிய புத்தகங்களைப் படிப்பதில் ஆழ்ந்த கவனமும் செலுத்தினார். அதன் விளைவாக அதற்கடுத்த வருடத்திலேயே தனது முதல் ஆராய்ச்சிக் கட்டுரையையும் பதிப்பித்தார். அவ்வருடம் சென்னையில் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் இக்கட்டுரைக்கு ஏற்ப சொற்பொழிவு மூத்த அறிவியலாளர்களின் மெச்சுதலோடு நடந்தேறியதுடன், அவரது ஆராய்ச்சிப் பயணமும் வெற்றிகரமாகத் தொடங்கியது.

1930ம் ஆண்டு, இந்திய அரசாங்கத்தின் பரிசும் பணஉதவியும் பெற்று, சந்திரசேகர் மேல்படிப்புக்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குப் பயணித்தார்.கல்லூரியில் படிக்கும்போது, தனது 19 வயதிலேயே, அரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புடன்கூடிய ஆராய்ச்சிக் கட்டுரையை சந்திரசேகர் வெளியிட்டார் (1929). ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு (Theory of Relativity), குவான்டம் கோட்பாடு (Principles of Quantum Physics) ஆகியவற்றைப் பயன்படுத்தி, வானியல் கோட்பாடு ஒன்றை அவர் உருவாக்கியிருந்தார். அந்தக் கோட்பாட்டைநிரூபிக்க சுமார் ஐம்பது ஆண்டுகள் அவர் செய்த தொடர் ஆராய்ச்சியின் பலனாக, விண்மீன்களின் இயல்பை அறிவதற்கான அரிய கோட்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் ஏன் வானம் நீலநிறமாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார். இதனால் பல உயரிய விருதுகளை சந்திரசேகர் பெற்றார். நட்சத்திர ஆராய்ச்சி அறிவியலுக்காக 1983ம் ஆண்டு நோபல்பரிசு பெற்றார். விண்வெளி இயற்பியலில் முக்கியமான கண்டுபிடிப்பாக, ‘சந்திரசேகர் வரையறை ’ (Chandrasekhar limit) கருதப்படுகிறது. விண்ணிலுள்ள நட்சத்திரங்களின் தோற்றம், மறைவு, கருந்துளைகளின் உருவாக்கம் ஆகியவை பற்றிய தொடர் ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டியாக விளங்குவது இக்கோட்பாடாகும். அமெரிக்க அணுவியல் விஞ்ஞானியான வில்லியம் ஃபௌலர் (1911-1995), விண்மீன்களின் இயக்கத்தில் நிலவும் அணுவியல் மாற்றங்கள் குறித்த கோட்பாட்டை உருவாக்கியவர். அவருக்கும், சுப்பிரமணியன் சந்திரசேகருக்கும் இணைந்து 1983-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுப்பிரமணியன் சந்திரசேகர் பெயரில் ஓர் ஆராய்ச்சி மையம் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

சக்திவேல்