Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு புழல் பகுதியிலிருந்து மினிபேருந்து இயக்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கரிடம் கோரிக்கை மனு

புழல்: புழல் பகுதியில் உள்ள கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு சென்று வர மினிபேருந்துகள் இயக்க வேண்டும், என்று அமைச்சர் சிவசங்கரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சென்னை புழல் பாலாஜி நகரில் தண்டராயப்பேட்டை வடக்கு மண்டல கோட்டாட்சியர் அலுவலகம், மாதவரம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்த 2 அலுவலகங்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சான்றிதழ்கள் பெற ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மாநகர பேருந்து வசதி இல்லாததால் லட்சுமிபுரம், ரெட்டேரி கல்பாளையம், சூரப்பட்டு, புத்தகரம், வட பெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மாதவரம் பால் பண்ணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மேற்கண்ட அலுவலகத்திற்குச் செல்வதற்கு புழல் மத்திய சிறைச்சாலை அருகில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர்.

இந்த பகுதிக்கு மாநகரப் பேருந்து இல்லாததால் பொதுமக்கள் அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் சென்று வருகின்றனர். இதனால் கடந்த அதிமுக ஆட்சியில் மினி பேருந்து இயக்க பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மாதவரம் வடக்கு பகுதி திமுக செயலாளர் புழல் நாராயணன் நேற்று சென்னையில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை நேரில் சந்தித்து கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு செல்ல புழல் அடுத்த ரெட்டேரி, லட்சுமிபுரம் பகுதியில் இருந்து கதிர்வேடு, புழல் மத்திய சிறைச்சாலை, புழல் காந்தி பிரதான சாலை வழியாக வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், பால் பண்ணை, மாதவரம் பேருந்து நிலையம் வரை மினி பேருந்துகள் இயக்கக்கோரி மனு அளித்தார். இதை பெற்றுக்கொண்ட அமைச்சர் விரைவில் பரிசீலனை செய்து மினி பேருந்து விடப்படும் என்றார்.