Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

1 வயதில் முதல் வகுப்பில் சேர்ந்ததாக மனுவில் பொய் தகவல்; முன்னாள் அரசு பேருந்து ஓட்டுநருக்கு ரூ.50 அபராதம்.! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பொய்யான தகவல்களுடன் மனு தாக்கல் செய்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக முன்னாள் ஓட்டுனருக்கு 50 ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஓட்டுனராக பணியாற்றிய சீனிவாசன், தனது பள்ளிச் சான்றுகள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளில் தனது பிறந்த ஆண்டை 1969 எனக் குறிப்பிடுவதற்கு பதில், 1964 எனக் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில்தான் அதை கவனித்ததாகவும், இதை திருத்தக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்குமாறு போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், சீனிவாசன் கடந்த ஜூன் மாதம் பணி ஓய்வு பெற்றார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் மனுவில் கூறியுள்ள ஆதாரங்களைப் பார்க்கும் போது ஒரு வயதில் முதல் வகுப்பில் சேர்ந்து 13 வயதில் 1982ல் 12ம் வகுப்பை முடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மனுதாரர் முழுக்க முழுக்க பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. நீதிமன்றத்திற்கு பொய்யான தகவல்களை தந்த மனுதாரருக்கு ரூ.50 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை 2 வாரங்களில் மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு அவர் நேரில் சென்று தர வேண்டும் என்று உத்தரவிட்டார்.