Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெருந்துறையில் நாளை வேளாண் கண்காட்சி

*4,533 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: முதல்வர் வழங்குகிறார்

ஈரோடு : பெருந்துறையில் நடக்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை தொடங்கி வைத்து ரூ.26 கோடி மதிப்பீட்டில் 4,533 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை(11ம் தேதி) வழங்க உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு வருகிற நாளை (11ம் தேதி), நாளைய மறுதினம் (12ம்தேதி) இரண்டு நாள் நடைபெற உள்ளது.

கண்காட்சியில் அரசு மற்றும் தனியார் சார்பில் 218 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. இதில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை தொழில் நுட்பங்கள், புதிய ரக வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர் விதைகள், ஒட்டு ரக பழ மரங்கள், தென்னங்கன்றுகள், பிற வகை மரக்கன்றுகள், வேளாண் இயற்திரங்கள், கருவிகள் விற்பனை, உயர் ரக கால்நடைகள் மற்றும் வளர்ப்பு முறைகள், மீன் வளர்ப்பு, வேளாண்மையில் வங்கி சேவைகள் போன்றவை குறித்து இடம் பெற உள்ளது.

25 தலைப்புகளின் கீழ் வேளாண் வல்லுநர்கள் அனுபவம் வாய்ந்த விவசாயிகள் மூலம் கருத்தரங்கமும் நடக்க உள்ளது. இந்த வேளாண் கண்காட்சியில் ஒரு லட்சம் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். இதற்காக பிரம்மாண்ட பந்தல், கண்காட்சி அரங்கம், கருத்தரங்கம் மேடை, நடைபாதை கற்கள் பதிக்கும் பணிகள் போன்றவை அமைக்கும் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதேபோல், முதல்வர் வருகையொட்டி சாலைகள் சீரமைத்தல், சென்டர் மீடியனுக்கு கருப்பு வெள்ளை வர்ணம் பூசுதல், வேகத்தடை அகற்றுதல் போன்ற பணிகளில் நெடுஞ்சாலைத்துறை மூலம் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கிற்கான இறுதிக்கட்ட பணிகளை நேற்று தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, எம்எல்ஏ சந்திரகுமார், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம், தெற்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், செல்லப்பொன்னி, பொதுக்குழு உறுப்பினர் குமாரசாமி, மணிராசு, பகுதி செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் கேபி சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதிய வளர்ச்சி திட்ட பணிகள்

முதல்வர் நிகழ்ச்சி குறித்து அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் நடக்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி கருத்தரங்கினை நாளை (11ம் தேதி) தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

கண்காட்சி அரங்கினை முதல்வர் திறந்து வைத்து, பார்வையிடுகிறார். இதையடுத்து கருத்தரங்கு மேடையில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 4,533 பயனாளிகளுக்கு சுமார் ரூ.26 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இதுதவிர மாவட்டத்தில் முடிவுற்ற அரசு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும், புதிய வளர்ச்சி திட்ட பணிகளையும் முதல்வர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார்.

இதைத்தொடர்ந்து, முதல்வர் மதிய உணவை முடித்து விட்டு, அன்றைய தினமே சேலம் மாவட்டத்திற்கு சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டு செல்கிறார். நாளை மறுதினம் (12ம் தேதி) தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

1,499 போலீசார் பாதுகாப்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணி மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், கோவை சரக டிஐஜி சசிமோகன் மற்றும் ஈரோடு எஸ்பி சுஜாதா தலைமையில் ஏடிஎஸ்பி.க்கள், டிஎஸ்பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐ.க்கள், சட்டம் ஒழுங்கு போலீசார், ஆயுதப்படை போலீசார் என 1,499 பேர் ஈடுபடுகின்றனர்.

மேலும், ஊர்காவல் படையை சேர்ந்த 175 பேர் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணி, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதவிர தீ போன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்க தீயணைப்பு வாகனத்துடன் தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.