ராமனாக மாறிய பெருமாள்
கும்பகோணம் அருகில் உள்ள சேங்கனூருக்கு அருகில் இருக்கும் சிற்றூர் திருவெள்ளியங்குடி. யமன் பூலோகம் வந்து விஷ்ணுவை நோக்கி தவம் செய்யவே, விஷ்ணு சங்கு, சக்கரத்துடன் காட்சி கொடுத்தார். அதைக் கண்டு பயந்த யமன், ராமபிரானாக காட்சி தர வேண்டும் என திருமாலிடம் வேண்டவே, உடனே திருமால் தன் கையிலிருந்த சங்கு, சக்கரங்களை அருகிலிருந்த கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு அலங்கார நாயகனாக ராமபிரானாக காட்சி கொடுத்தார். அதனால் இவருக்கு கோலவில்லிராமன் என்று பெயர்.
கை கொடுக்கும் திருமால்
கேரளாவில் உள்ள கண்ணூர் என்ற ஊருக்கு அருகில் உள்ளது பெரியாற்று மகாவிஷ்ணு ஆலயம். இக்கோயிலில் உள்ள மகாவிஷ்ணு பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். நான்கு கைகள், மேலே இடது கையில் தாமரை, வலது கையில் கதை என்றுதான் பொதுவாகக் காணப்படும். ஆனால் இங்கு பகவான் கஜேந்திரனை காப்பாற்றுவதற்காக தனது வலக்கரத்தை நீட்டி கஜேந்திரனைக் காப்பாற்றும் பாவனையில் கை நீட்டியபடியுள்ள வண்ணம் தரிசனம் அளிக்கிறார்.
பெருமாளின் அபூர்வ திருக்கோலம்
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது வீரநரசிம்மர் திருக்கோயில். இக்கோயிலில் சக்கரத்தாழ்வார் சந்நதி உள்ளது. வலப்புறம் யானையைத் தடவிக்கொடுப்பது போலவும், இடப்புறம் தஞ்சகாசுரன் என்ற அரக்கன் பெருமாளை வணங்கிய நிலையிலும் அது அமைந்துள்ளது. மேலும், அவருக்குப் பின்புறம் நரசிம்மர் யோக பீடத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் உள்ளார். அவருக்கு இரு புறங்களிலும் இரணியன், பிரகலாதன் ஆகியோர் உள்ளனர்.
சரஸ்வதி தேவியின் குருவிற்கு ஒரு கோயில்
வேலூருக்கு அருகில் உள்ள வாலாஜாபேட்டையில் கல்வி சிறக்க அருளும் ஹயக்ரீவருக்கு ஒரு கோயில் உள்ளது. மகாவிஷ்ணுவின் அவதாரமான ஹயக்ரீவர், வித்யைக்கு அதிபதியான சரஸ்வதி தேவிக்கு குருவாகப் போற்றப்படுபவர். இவர் இத்தலத்தில் தாயாருக்கு உபதேசம் செய்யும் திருக்கோலம் காணக் கண் கொள்ளாதது; வெகு அபூர்வமானது. ஹயக்ரீவர் வெளிர் பச்சைக்கல் திருமேனியில் காட்சிதருவதும் வெறெங்கும் காணக்கிடைக்காததே.
நின்று அருளும் மகாலட்சுமி
மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தலைச்சங்காடு என்ற திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் லட்சுமிதேவி தனிச் சிறப்புடன் அருள்கிறாள். பொதுவாக, அம்பாள் தனிச் சந்நதியில் காட்சி தரும்போது அமர்ந்த கோலத்தில் இருப்பதுதான் வழக்கம். ஆனால், இத்தலத்தில் நின்ற திருக்கோலத்தில் இருந்து அருள்பாலிப்பது வித்தியாசமாகக் கருதப்படுகிறது.
கந்தசஷ்டி பன்னிரண்டு நாட்கள்
பொதுவாக முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா ஆறு நாட்களே நடக்கும். ஆனால், திருச்செந்தூர் பாலசுப்பிரமணியன் கோயிலில் 12 நாட்கள் நடத்துகின்றனர். முதல் ஆறு நாட்கள் சஷ்டி விரதமும், சூரசம்ஹாரமும், 7ம்நாளில் முருகன் தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த ஐந்து நாட்கள் சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என்று கொண்டாடுகிறார்கள். இத்தல மேற்கு நுழைவு வாயில் பகுதியில் உள்ள ராஜகோபுரம் கந்தசஷ்டி அன்று முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் மட்டுமே திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் திறக்கப்படுவதில்லை.
அரிய வடிவில் தட்சிணாமூர்த்தி
சென்னை - வேலூர் பாதையிலுள்ள காவேரிப்பாக்கம் சிவன் கோயிலில் அருளும் தட்சிணாமூர்த்தியின் வடிவத்தின் சிரசிலுள்ள அடர்ந்த சுருள் முடிகள் எல்லாம் ஜடாபாரமாக அமையப் பெற்றுள்ளன. வலது பின் கரத்தில் அட்சர மாலையும், இடது பின் கரத்தில் அக்னியும் உள்ளன. அவர் திருவுருவின் கீழ் உபதேசம் கேட்கும் நிலையில் மான் ஒன்றும், நாகம் ஒன்றும் உள்ளன. இது ஓர் அபூர்வமான அமைப்பாகும்.
தொகுப்பு: ராதாகிருஷ்ணன்