Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக பணிகளை முன்னிட்டு பாலாலயம் நடைபெற்றது

திருவள்ளூர்: பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக பணிகளை முன்னிட்டு பாலாலயம் நடைபெற்றது. ஆடி மாதம் தொடங்குவதற்கு முன் திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்திட திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. கும்பாபிஷேகம் முடிவடைந்த பிறகே மூலவரை தரிசிக்க அனுமதி என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு பவானிஅம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்தது. சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

ஆடி மாதம் முதல் வாரம் தொடங்கி 14வாரங்கள் இந்த பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் விழா கோலம் பூண்டிருக்கும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா என் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆடி மாதத்தில் அம்மனை தரிசித்து செல்வது வாடிக்கை. இந்த கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இன்று பாலாலயம் நடைபெற்றது. ஆலயத்தில் அக்னி குண்டம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடத்தி பாலாலயம் செய்யப்பட்டு மூல ஸ்தானத்தில் உள்ள அம்மன் உற்சவர் மண்டபத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

தடுப்பு வேலிகள், மண்டப பணிகள், கோபுரங்களுக்கு வண்ணம் பூசுதல், மூலவர் சன்னதி புணரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு ஆடி மாதம் தொடங்குவதற்கு முன்பாக கும்பாபிஷேகத்தை நடத்திட அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேகம் முடிவடைந்த பிறகே மூலவரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும், அதுவரையில் பக்தர்கள் உற்சவரை தரிசித்து அம்மனை வணங்கிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் சுமார் 159 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம், அன்னதான கூடம், பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி காணொளி காட்சி மூலம் பணிகளை தொடங்கி வைத்த நிலையில் அந்த கட்டுமான பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.