Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர ஹோமம்

பாடாலூர்: குபேர ஹோம சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் கடன் தீர்ந்து செல்வம் பெருகும் செல்வாக்கு உயரும் என்பது நம்பிக்கையாகும். ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற குபேர ஹோம சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோயிலில் 12 ராசிகள் 27 நட்சத்திரங்களுக்குமான குபேரன் மீன ஆசனத்தில் வீற்றிருக்குமாறு, கல் தூண்களின் சிற்பங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் காமாட்சி அம்பாள் சன்னதிக்கு எதிரில் மகா குபேரனுக்கு தனி சன்னதி உள்ளது.

இந்த சன்னதியில் மகா குபேரர் சித்ரலேகாவுடன் தாமரை மலர்மேல் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். இந்த சன்னதியில் ஒவ்வொரு மாதமும் குபேரனின் ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று மகா குபேர ஹோமம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி பூரட்டாதி நட்சத்திரத்தையொட்டி இன்று மகா குபேரனுக்கு ஹோமமும், சிறப்பு வழிபாடும் வெகு விமரிசையாக நடந்தது.

சுவாமிக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் குபேர ஹோமமும் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து சித்ரலேகா சமேத மகா குபேரனுக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குபேர ஹோம சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் கடன் தீர்ந்து செல்வம் பெருகும் செல்வாக்கு உயரும் என்பது நம்பிக்கை.

இதனால் குபேர யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகத்தில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், பெரகம்பி, பொம்மனப்பாடி, சத்திரமனை, குரூர், சிறுவயலூர், பாடாலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.