Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடலூர் மக்கள் இன்று வைத்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கடலூர் மாவட்ட மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று ரயில் மார்க்கமாக சிதம்பரம் வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று காலை சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123-வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், சிதம்பரத்தில், "உங்களுடன் ஸ்டாலின்" என்ற புதிய திட்டத்திற்கான முகாமினை தொடங்கி வைத்து, சிதம்பரம் வட்டம், லால்புரத்தில் கட்டப்பட்டுள்ள எல். இளையபெருமாள் அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை திறந்து வைத்தார்.

இந்த பயணத்தின் போது கடலூர் மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவற்றை உடனடியாக நிறைவேற்றி கீழ்க்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

1. நடராஜர் கோவில், அண்ணாமலை பல்கலைக்கழகம் போன்ற பல சிறப்புகளை பெற்றுள்ள சிதம்பரம் நகரத்தில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தில்லை அம்மன் ஓடை மற்றும் கான் சாகிப் கால்வாய் ஆகியவற்றை ஒட்டி, புதிய இணைப்புச் சாலை ஒன்று 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

2. வட மாவட்டங்களில் உள்ள அனைத்து பழங்குடியினரும் பயன்பெறும் வகையில், கடலூர் வட்டத்தில் உள்ள அரிசிபெரியான்குப்பத்தில், புதிய உண்டு உறைவிட பழங்குடியினர் பள்ளி ஒன்று தொடங்கப்படும்.

3. காட்டுமன்னார்கோயில் வட்டத்திலிருந்து புதிதாக பிரிக்கப்பட்டுள்ள ஸ்ரீமுஷ்ணம் வட்டத்திற்கும், காவிரி டெல்டா பகுதிக்காக செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களின் பயன்கள் கிடைக்கும் வகையில், ஸ்ரீமுஷ்ணம் வட்டம் காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்கப்படும்.

4. வீராணம் ஏரிப் பகுதியில் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், சோழதரத்தில் இருந்து இராஜமதகு வரை படகுச்சவாரி மேற்கொள்ளவும், சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை அமைத்திடவும், 10 கோடி ரூபாய் செலவில் ஏரி தூர்வாரும் பணிகளும் சுற்றுலா மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படும்.

5. சட்டமன்ற உறுப்பினர் திரு. சிந்தனைச்செல்வன் அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறனை மேம்படுத்தி, அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், கூடுவெளி சாவடியில் புதிய திறன் மேம்பாட்டு நிலையமும் தொழிற்பேட்டையும் அமைக்கப்படும்.

மேலும், இன்று காலை எல். இளையபெருமாள் அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழாவில், கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் வாழும் மகளிருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், குறிஞ்சிப்பாடி அருகில் இருக்கும் கொடுக்கன்பாளையத்தில், 150 ஏக்கர் பரப்பளவில், தோல் அல்லாத காலணி மற்றும் காலணிகளுக்கான உதிரிபாகங்கள் உற்பத்திக்கான பெரும் தொழில் பூங்கா 75 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.