Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிலுவை வைத்திருக்கும் நிதிகளையும் முழுமையாக விடுவிக்க ஒன்றிய பாஜ அரசை எதிர்த்து கட்சி பாராமல் எம்எல்ஏக்கள் ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும்: மார்க்சிஸ்ட் எம்எல்ஏ பேச்சு

தமிழக சட்டப் பேரவையில் நேற்று கந்தர்வகோட்டை தொகுதி உறுப்பினர் மா.சின்னதுரை (மார்க்சிஸ்ட்) பேசியதாவது: சமக்ரா சிக்ஷா திட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.2152 கோடியை தராமல் வேறு மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுத்தது வரலாற்றில் இதுவரை ஆட்சிப் பொறுப்பில் இருந்த எந்த ஒன்றிய அரசும் செய்யாத நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஒன்றிய அரசின் தாக்குதல்களுக்கு எதிராகவும், தமிழக மக்களின் நலன்களுக்கு ஆதரவாகவும் மாநில அரசு மேற்கொள்ளும் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முழு ஒத்துழைப்பை நல்கும். ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ள அனைத்து நிதிகளையும் முழுமையாக விடுவிக்க கட்சி பாராமல் அவை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரல் எழுப்ப வலியுறுத்துகிறேன்.

அரசு ஊழியர், ஆசிரியர்களின் ‘சரண்டர் விடுப்பு பணப்பலன்’ வரவேற்கத்தக்கது.

இதை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வலியுறுத்துகிறோம். தமிழகத்தில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வி முடித்துவிட்டு வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களின் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு அரசுத் துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பிட வேண்டும்.

மூலப்பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து இருப்பதால் கலைஞர் கனவு இல்லம் திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டம் ஆகிய திட்டத்தில் வீடுகள் கட்டிட ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கிட வேண்டும். காப்பி, தேயிலை, ரப்பர், மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட விளை பொருட்களுக்கான விலை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இவற்றிற்கு எல்லாம் கூடுதலான நிதியினை ஒதுக்கிட வேண்டும். பயிர்க் காப்பீட்டுக்கு அரசே தனி நிறுவனம் தொடங்கினால் விவசாயிகள் அதிகம் பயனடைவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.