பாட்னா: பாட்னாவில் ஒருதலைக் காதலை ஏற்க மறுத்த சிறுமியையும், அவருடன் இருந்த சிறுவனையும் கொடூரமாக எரித்துக் கொலை செய்த வழக்கில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். பீகார் மாநிலம் பாட்னாவின் ஜானிபூர் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில், இரண்டு சிறார்களின் எரிந்த உடல்கள் கடந்த ஜூலை 31ம் தேதி மீட்கப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாட்னா எஸ்.பி. கார்த்திக் கே. சர்மா கூறுகையில், ‘இவ்வழக்கு ஒருதலைக்காதல் விவகாரம்; கொலையாளி சுபம் என்பவருக்கும், பலியான சிறுமிக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்துள்ளது.
சுபமின் தாயாரும், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஊழியர்களாகப் பணியாற்றியுள்ளனர். இதன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில், பள்ளி மாணவனான ரோஷன் என்பவர் வழியாக சுபம் அந்த சிறுமியுடன் பழகி வந்துள்ளார். ஆனால், சிறுமி சுபத்தின் காதலை ஏற்க மறுத்தார். புனேவில் வசித்து வந்த சுபம், இந்த கொலையைச் செய்வதற்காகவே பாட்னாவிற்கு வந்துள்ளார். முன்னரே திட்டமிட்டபடி, கடைக்குச் சென்று மண்ணெண்ணெய் வாங்கியுள்ளார். பின்னர், சிறுமியின் வீட்டிற்குச் சென்றபோது, சிறுமி கதவைத் திறந்துள்ளார். அச்சமயம், வீட்டினுள் மற்றொரு சிறுவன் உறங்கிக் கொண்டிருந்தான். உள்ளே நுழைந்த சுபம், முதலில் அந்த சிறுவனை செங்கல்லால் தாக்கி, பின்னர் சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
அதன்பிறகு, தடயங்களை அழிக்கும் நோக்கில் இருவர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில், மகாபந்தன் கூட்டணியின் புல்வாரி தொகுதி எம்எல்ஏ கோபால் ரவிதாஸ் உட்பட 10 பேர் மீதும், அடையாளம் தெரியாத 30 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, வெறும் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளைக் கண்டறிந்து, சுபம் மற்றும் அவரது நண்பர் ரோஷன் குமார் ஆகிய இருவரையும் கைது செய்தது’ என்றார்.