உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாததால் சிசு பலி நோயாளிகள் ஒன்றும் ‘ஏடிஎம்’ இயந்திரங்கள் அல்ல: தனியார் மருத்துவமனைகளை விளாசிய ஐகோர்ட்
அலகாபாத்: கர்ப்பிணிக்கு உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாததால் சிசு பலியான நிலையில், நோயாளிகள் ஒன்றும் ஏடிஎம் இயந்திரங்கள் அல்ல என்று தனியார் மருத்துவமனைகளை அலகாபாத் ஐகோர்ட் விளாசியது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2007ம் ஆண்டு, ஜூலை 29 அன்று, கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர் கூறியதையடுத்து, அன்று காலை 11 மணியளவில் பெண்ணின் குடும்பத்தினர் அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
ஆனால், மாலை 5.30 மணிக்குத்தான் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாமதத்தால், தாயின் கர்ப்ப பையிலேயே சிசு உயிரிழந்தது. இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர் மருத்துவரிடம் கேட்டபோது, மருத்துவமனை ஊழியர்கள் அவர்களைத் தாக்கியதாகவும், சிகிச்சைக்காக ரூ.8,700 வசூலித்ததோடு, கூடுதலாக ரூ.10,000 கேட்டதாகவும், டிஸ்சார்ஜ் சான்றிதழ் தர மறுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மருத்துவர் அசோக் குமார் ராய் மீது 2008ல் மரணம் விளைவித்தல், சிசுவின் மரணத்திற்குக் காரணமாகுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மருத்துவர் அசோக் குமார் ராய், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரசாந்த் குமார், மருத்துவரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் பிறப்பித்த உத்தரவில், ‘தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை பணம் பறிக்கும் ‘ஏடிஎம் இயந்திரங்களாக’ அல்லது ‘சோதனை எலிகளாக’ நடத்தத் தொடங்கியுள்ளன. நோயாளியின் உறவினர்களிடம் ஒப்புதல் பெற்ற பிறகும் 4 முதல் 5 மணி நேரம் அறுவை சிகிச்சையைத் தாமதப்படுத்தியதற்கு மருத்துவரால் உரிய காரணத்தை விளக்க முடியவில்லை.
மயக்க மருந்து நிபுணர் மாலை 3.30 மணிக்குத்தான் அழைக்கப்பட்டுள்ளார். இவை மருத்துவமனையின் அலட்சியத்தையும், அவசர தயார் நிலையில் இல்லாததையும் காட்டுகிறது. மருத்துவர்களை தேவையற்ற வழக்குகளிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் தங்கள் கடமையை உரிய கவனத்துடனும் திறமையுடனும் செய்யும்போது மட்டுமே அந்தப் பாதுகாப்பு பொருந்தும். இந்த வழக்கில் மருத்துவரின் மோசடி நோக்கம் தெளிவாகத் தெரிவதால், அவர் மீதான குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர போதுமான முகாந்திரம் உள்ளது’ என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.