Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

படாளம் - உதயம்பாக்கம் இடையே பாலாற்றில் தடுப்பணையுடன் மேம்பாலம் அமைக்க வேண்டும்: கரும்பு விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

மதுராந்தகம்: படாளம் - உதயம்பாக்கம் இடையே பாலாற்றில் தடுப்பணையுடம் மேம்பாலம் அமைக்க வேண்டும், என்று கரும்பு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு தெரிவிக்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், படாளம் கிராமத்தில் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை 1961ம் ஆண்டு காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது கரும்பு ஆலையை திறந்து வைத்தார். இந்த கரும்பாலைக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படும் கரும்பு ஆலைக்கு கொண்டு வரப்பட்டு அரவை செய்து சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

படாளம் சர்க்கரை ஆலையையொட்டி பாலாறு அமைந்துள்ளது. இந்த பாலாற்றின் மறுகரை பகுதி திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் உள்ள உதயம்பாக்கம் மணப்பாக்கம், பொன்பதுர்கூடம், ஆனூர், எலுமிச்சம்பட்டு, ஆலப்பாக்கம், ஒழலூர், உள்ளிட்ட பாலாற்றம் கரையோரம் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் செய்யப்படும் கரும்பினை படாளம் சர்க்கரை ஆலைக்கு எளிதில் கொண்டு வரும் வகையில் படாளம் - உதயம்பாக்கம் இடையே பாதை அமைக்கப்பட்டு இந்த பாதையில் டிராக்டர் மூலம் விவசாயிகள் கரும்பை கொண்டு வந்தனர்.

படாளம் - உதயம்பாக்கம் இடையே உள்ள பாலாற்றில் 1995ம் ஆண்டு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தரைப்பாலம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, 1997ம் ஆண்டு பெய்த பலத்த மழையால் பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தரைப்பாலம் சேதமடைந்தது. இந்நிலையில், இந்த பாலம் இது நாள் வரை சீரமைக்கப்படாமல் உள்ளது. மேலும், பொதுமக்களும் அந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது. ஆண்டுதோறும் தற்காலிக பாதை அமைக்கப்பட்டாலும் பாலாற்றில் ஏற்படும் வெள்ளத்தால் தற்காலிக பாதையும் மழை நீரில் அடித்து சென்றுவிடுகிறது.

இதனால் படாளம் - உதயம் பாக்கம் இடையே பாலாற்றில் தடுப்பனையுடன் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.இந்த கோரிக்கையானது தற்பொழுது தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது. எனவே, படாளம் - உதயம்பாக்கம் கீழ்பகுதியில் தடுப்பனையும், அணையின் மேல் பகுதியில் மேம்பால அமைத்தால் விவசாயிகள் எளிதாக ஆலைக்கு கரும்புகள் கொண்டு செல்ல இயலும். எனவே, படாளம் - உதயம்பாக்கம் இடையே தடுப்பணையுடன் மேம்பாலம் அமைக்க வேண்டும், என்று அப்பகுதி மக்களும், விவசாயிகளும் எதிர்பார்ப்பு தெரிவிக்கின்றனர்.

கரும்பு விவசாயம் பெருகும்

படாளம் சர்க்கரை ஆலைக்காக உருவாக்கப்பட்ட உதயம்பாக்கம் பாலம் தற்போது பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் விளைவிக்கப்படும் கரும்புகள் சுமார் 30 கிலோமீட்டர் சுற்றி வந்து ஆலையை அடைகிறது. இதனால் கரும்பு விவசாயம் செய்வதை அப்பகுதி விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். எனவே இந்த பகுதியில் தடுப்பணையுடன் மேம்பாலம் அமைத்தால் கரும்பு விவசாயம் பெருகும், போக்குவரத்தும் எளிதாகும்.

கல்லணை வடிவில்

படாளம் உதயம்பாக்கம் இடையே பாலாற்றில் கல்லணை வடிவில் கீழ்ப்பகுதியில் தடுப்பனையும் மேல் பகுதியில் மேம்பாலத்துடன் சாலையும் அமைத்தால் கரும்பு நெற்பயிர் விவசாயம் பெருகும். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் இந்த பாலத்தை பயன்படுத்தலாம்.