Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேட்டுப்பாளையம் - கோவை மெமு ரயிலில் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் பயணிகள்

*கூடுதல் பெட்டிகளை இணைக்க வலுத்து வரும் கோரிக்கை

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் - கோவை மெமு ரயிலில் ஆபத்தான முறையில் படிக்கட்டில் பயணிகள் தொங்கியபடி செல்வதால் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து பணி நிமித்தமாகவும், பள்ளி, கல்லூரி செல்வதற்காகவும்,கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வோர் என நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் பொது போக்குவரத்தான பேருந்துகளை நாடி வந்தனர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்ல சுமார் ஒரு பயணிக்கு ரூ.30 வரை செலவிட வேண்டிய நிலை இருந்தது. மேலும், பயண நேரமும் ஒரு மணி நேரம் ஆகிறது.

இதனை தவிர்க்க பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள்,பணி நிமித்தமாக கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் பயணிகள் மற்றும் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் பயணிகள் ரயிலில் செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தனர்.

இதனை கருத்தில் கொண்டு கடந்த 2019 ம் ஆண்டு முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு பயணிகள் மெமு ரயில் எட்டு பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவை கடந்த 2020 ம் ஆண்டு கொரோனா காலகட்டங்களில் நிறுத்தப்பட்டது. கொரோனா காலகட்டங்கள் முடிந்த பிறகு இந்த ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.அப்போது,இந்த மெமு ரயில் எட்டு பெட்டிகளுடன் இயக்கப்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலில் ஒரு பெட்டிக்கு தோராயமாக 200 பேர் வீதம் 8 பெட்டிகளில் 1600 பேர் மட்டுமே பயணிக்க முடியும். ஆனால், தற்போது 3800 பேர் வரை பயணித்து வருகின்றனர். இதனால் போதிய இட வசதியின்றி பலர் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் தொங்கிச்செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது.

இதுகுறித்து ரயில்வே பயணிகள் நலச்சங்கத்தினரும், பயணிகளும் கூடுதல் பெட்டிகளை இணைக்க கோரி பலமுறை ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் இந்த ரயிலில் கோவை ஜங்ஷன் சென்று பின்னர் அங்கிருந்து நடந்தே சென்று விடலாம்.

இதனால் இந்த ரயிலில் செல்வதை பெரும் வரப்பிரசாதமாக நினைத்து வரும் நிலையில் நாள்தோறும் 3800 பயணிகள் வரை இட நெருக்கடியுடன் பயணிப்பதால் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும்,பணி நிமித்தமாக கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்வோரும் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் நிலை தொடர்ந்து வருகிறது.

இதுகுறித்து நம்ம மேட்டுப்பாளையம் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெய்குமார் கூறியதாவது: மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும் இந்த மெமு ரயிலில்

மேட்டுப்பாளையத்திலேயே பயணிகள் நிரம்பி வழிகின்றனர்.

அதனை தொடர்ந்து காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பயணிகள் இந்த ரயிலில் ஏறும் போது பயணிகள் வேறு வழியின்றி படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டிய இக்கட்டான சூழல் இருந்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு ஆய்வுக்கு வரும் ரயில்வே அதிகாரிகளை நேரில் சந்தித்து தற்போது இயக்கப்பட்டு வரும் 8 பெட்டிகளுடன் கூடிய ரயிலை கூடுதலாக 4 பெட்டிகளை இணைத்து 12 பெட்டிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது காலை 11 மணிக்கு பின்னரே மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு வருகின்றனர். ரயில்வே அதிகாரிகள் காலை 8.20 மணி அளவில் ஆய்வுக்கு வரும் போது தான் பயணிகள் எந்த அளவிற்கு இந்த ரயிலை பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெரிய வரும்.

எனவே தான், கூடுதல் பெட்டிகளை இணைத்து மெமு ரயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 150 ஆண்டுக்கும் மேலான பாரம்பரியமிக்க மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் மற்றும் வடகோவை இடையேயான ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையாக மாற்ற வேண்டும் என்றும் பல ஆண்டுகளான கோரிக்கை விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல, கடந்த சில தினங்களாகவே மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் கால தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் குறிப்பிட்ட நேரத்தில் கோவைக்குச்சென்று பின்னர் அங்கிருந்து மதுரை, பழனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் ரயிலை பிடிக்க முடியாமல் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் இந்த மெமு ரயிலை சரியான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவும் கூடுதல் பெட்டிகளுடன் இயக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.