Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

46 ஆண்டுகள் வளர்த்த கட்சியை அபகரிக்க முயற்சி; நான் வயிறு எரிந்து சொல்கிறேன் உன் அரசியல் இதோடு குளோஸ்: அன்புமணிக்கு ராமதாஸ் சாபம்

* எந்த நீதிமன்றத்திற்கு சென்றாலும் ‘உன் பாச்சா என்னிடம் பலிக்காது’ என ஆவேசம்

வடலூர்: நான் வயிறு எரிந்து சொல்கிறேன், உன் அரசியல் பயணம் இதோடு முடிந்துவிட்டது என்று அன்புமணிக்கு ராமதாஸ் சாபம் விடுத்துள்ளார். ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் வடலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, பொதுச்செயலாளர் முரளி சங்கர், அருள் எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு தலைமை தாங்கி கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:

எனக்கு ஒரு மகன் பிறப்பான்... என்னைபோல் இருப்பான்..., ஆனால் எனக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் என்னிடம் இருந்து என் உயிரை மட்டும்தான் பறிக்கவில்லை. ஆனால் நான் சிந்திய வியர்வை எல்லாவற்றையும் பறித்து விட்டான். இருந்தாலும் என்னிடமிருந்து என் உரிமையை மட்டும் பறிக்க முடியாது. சுப்ரீம் கோர்ட் சென்றாலும் என் உரிமையை பறிக்க முடியாது. சூழ்ச்சியால்தான் தன்னை தலைவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்.

மேலும், எந்த நீதிமன்றத்திற்கு சென்றாலும் ராமதாசை வீழ்த்த முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். 46 ஆண்டுகள் 96 ஆயிரம் கிராமங்கள் என் மக்களிடம் சென்று நான் வளர்த்த கட்சியை முழுதும் அபகரிக்க முயற்சிக்கின்றாய். அதனால்தான் இந்த கட்சியின் தலைவராக நான் வந்து இருக்கிறேன். எனக்கு உதவியாக செயல் தலைவராக எனது மகள் ஸ்ரீகாந்தியை நியமித்துள்ளேன்.

கடந்த 28.5.2022ம் ஆண்டு திருவேற்காட்டில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உன்னுடைய பதவிக்காலம் முடிந்துவிட்டது. பணம் பத்தும் செய்யும் என்பார்கள். பணத்தால் தேர்தல் ஆணையத்தை விலைக்கு வாங்கி உள்ளாய். என்னுடன் இருந்தவர்களையும் விலைக்கு வாங்கி விட்டாய். இருந்தாலும் ஜெயிக்கப் போவது இந்த ராமதாஸ் தான். பணம் என்ன தான் இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

தனியாக நின்று 4 எம்எல்ஏக்கள் பெற்ற கட்சி. நான் மக்களிடம் சென்று ஓட்டு கேட்டபோது, ஓட்டு ஒன்று போடுங்க... ஒரு ரூபாய் நோட்டு கொடுங்க.. என கேட்டு வளர்த்த கட்சி இது. தற்போது கூட்டணி வைத்து 5 எம்எல்ஏக்கள் உள்ளது. இதற்கு காரணம் அன்புமணி தலையீடுதான். என்னுடைய உரிமையையும் உழைப்பையும் யாராலும் திருட முடியாது. இதுபோன்ற கூட்டத்தை உன்னால் கூட்ட முடியுமா?.

நீ அப்படி ஒரு கூட்டத்தை கூட்டினால் ரூ.25 லட்சம் முன்கூட்டியே கொடுத்துதான் கூட்ட முடியும். ஆனால் இன்று மழை, புயல் சூறாவளி எல்லாவற்றையும் இந்த கூட்டம் நிறுத்திவிட்டது. ஐயா தான் எங்களுக்கு எல்லாம் என்று மக்கள் எல்லாம் நினைத்து விட்டார்கள். இருந்தாலும் நான் சொல்கின்றேன். உண்மை தான் ஜெயிக்கும். டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு வருகின்ற திங்கள்கிழமை விசாரணைக்கு வரும். என்னை உன்னால் வெல்ல முடியாது.

நான் செய்த பெரிய தவறு என்னவென்றால் உன்னை படிக்க வைத்து டாக்டர், மத்திய மந்திரி, கட்சியின் தலைவர் ஆக நியமித்தது தான். நான் மருத்துவமனையில் இருந்தபோது பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் நலம் விசாரித்து சென்றனர். ஆனால் நீ மட்டும் கீழே உள்ள மருத்துவரிடம் நலம் விசாரித்துவிட்டு சென்று விட்டாய். தமிழக மக்களையும், வன்னிய மக்களையும் ஏமாற்ற முடியாது.

நீதி நியாயம் வெற்றிபெறும். என் பக்கம் நியாயம் உள்ளது, மக்கள் என்னுடன் உள்ளனர். சினிமா பாணியில் சொல்லப்போனால் உன் பாச்சா என்னிடம் பலிக்காது. நிர்வாகிகளை கிரேன் மூலம் மாலை போடச் சொல்வது உன்னுடைய பழக்கம். மாறாக புத்தகத்தை பரிசாக கொடுங்கள் என தான் கூறி வருகிறேன். நான் வியர்வை சிந்தி வளர்த்த ஆலமரம் தான் இந்த கட்சி. ஆனால் நீ மரத்தின்மேல் கிளையில் உட்கார்ந்து கொண்டு அடிக்கிளையை வெட்டினால் கீழே விழுவது நீயாகத்தான் இருப்பாய்.

ஆலமரத்தின் கீழ்உள்ள ஆயிரக்கணக்கான விழுதுகள் நிழலுக்காக வருகின்ற மக்கள்தான் என் மக்கள். எப்பொழுதும் என் பக்கம்தான் இருப்பார்கள். கோடாரி கொண்டு மரத்தை வெட்ட பார்க்கிறாய். ஆனால் உன்னால் அதை வெட்ட முடியாது. நான் வயிறு எரிந்து செல்கிறேன். உன் அரசியல் பயணம் இதோடு முடிந்து விட்டது. இனிமேல்தான் பாமக வளர்ச்சி அடையும். 2026ம் ஆண்டு கூட்டணி கட்சியுடன் சேர்ந்து நிறைய எம்எல்ஏக்களை உருவாக்கி அமைச்சராக உருவாக்குவேன். அதற்கு நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* எனக்கு ஒரு மகன் பிறப்பான்... என்னைபோல் இருப்பான்..., ஆனால் எனக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் என்னிடம் இருந்து என் உயிரை மட்டும்தான் பறிக்கவில்லை.

* பணம் பத்தும் செய்யும் என்பார்கள். பணத்தால் தேர்தல் ஆணையத்தை விலைக்கு வாங்கி உள்ளாய். என்னுடன் இருந்தவர்களையும் விலைக்கு வாங்கி விட்டாய். இருந்தாலும் ஜெயிக்கப் போவது இந்த ராமதாஸ் தான்.