Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் தான் போட்டி; நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் எங்களுடன் மோதப் பார்க்கிறார்கள்: பாஜக மீது மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் கடும் தாக்கு

சென்னை: மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காலை, மாலை என இடைவிடாமல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தயாநிதிமாறன் இன்று காலை துறைமுகம் கிழக்குப் பகுதிக்கு உட்பட்ட பி.ஆர்.என் கார்டன், செம்பு தாஸ் தெரு, மூக்கர் நல்லமுத்து தெரு, கொத்தவால்சாவடி, மண்ணடி ஆகிய பகுதிகளில் இன்று காலை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரசாரத்தில் பிராட்வே பிரகாசம் சாலையில் பொது மக்கள் தயாநிதிமாறனுக்கு சாக்லேட் மாலை அணிவித்து பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து தயாநிதிமாறன் அளித்த பேட்டி: உதயநிதி ஸ்டாலின் நேற்று மக்கள் கடலில் மூழ்கும் அளவுக்கு இருந்த கூட்டத்தில் பிரசாரம் செய்தார். எங்கு சென்றாலும் மக்கள் பேராதரவு உள்ளது. திமுக கூட்டணி நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைக்கும். உலகத்திலேயே முதல் முறையாக மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டத்தைக் கொண்டு வந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தத் திட்டம் காட்டுத் தீ போல் பரவி இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் செயல்படுத்துகிறார்கள். இது ஆரம்பம் தான். அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி படிக்கும்போது மாதம் ரூ.1000 கொடுக்கப்படுகிறது. ஆணும் பெண்ணும் சமம். ஆணும் பெண்ணும் படித்து வேலைக்குச் சென்றால் தான் நாடு முன்னேறும்.

இந்தியாவில் வேலை செய்யும் பெண்களில் 43 சதவீதம் தமிழகத்தில் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கும் அதிமுகவுக்கும் தான் போட்டி. மற்றவர் போட்டி நோட்டவுடன் தான். நோட்டவுடன் போட்டி போடுபவர்கள் எங்களுடன் மோதப் பார்க்கிறார்கள். அவர்களை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று முதல்வர் சொல்கிறார். வெறும் கையை வீசிக்கொண்டு பிரதமர் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் யாரும் வரவேண்டாம். மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு பங்கை கொடுக்காமல் வெறும் வாயில் வடை சுடாதீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்

அமைச்சர் பி.கே.சேகர்ப்பு சேகர் பேசுகையில், ” வேட்பாளர் தயாநிதிமாறன் இதற்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது எப்போதெல்லாம் உரிமைக்கு குரல் கொடுக்க வேண்டுமோ அப்போதெல்லாம் எதைப் பற்றியும் பயப்படாமல் நாடாளுமன்ற மைய மண்டபத்தை அலற வைப்பவர். அவர் கால் படாத இடமே மத்திய சென்னையில் இல்லை, நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் இல்லை அவர். அரசியல் பாரம்பரிய குடும்பம் என்பதால் அவருக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கவில்லை. முப்பது ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் தன்னை இணைத்துக்கொண்டவர். எதிரணியில் கருத்து சொல்பவரின் வயது தயாநிதி மாறனின் தேர்தல் அனுபவத்துக்கு ஒப்பாகாது.

ஆனால், தமிழகத்திற்கு என்ன கொண்டு வருகிறார்கள், வெறும் கையை வீசிக்கொண்டு வருவதால் என்ன பயன். மேலும் இந்தப் பத்து ஆண்டுகளில் செயல்படுத்திய திட்டங்களை சொல்ல முடியுமா?. குறிப்பாக எய்ம்ஸ் கட்டி முடித்துவிட்டோம் என்று சொல்ல முடியுமா?. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதியை ஒதுக்கிவிட்டோம், இன்னும் ஆறு மாதத்தில் முடிந்துவிடும் என்று சொல்ல முடியுமா? ஒன்றுமே செய்யாமல் வெறும் வாயில் வடை சுடுகிறார்கள். இவ்வாறு பேசினார். பிரசாரத்தின் போது துறைமுகம் பகுதி செயலாளர் ராஜசேகர், முரளி, மண்டலகுழு தலைவர் ராமுலு, வழக்கறிஞர் பரிமளம் உள்ளிட்ட திமுகவினர் இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.