Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 கொடுத்ததுபோல் இடைத்தேர்தலில் அமோக வெற்றியை தாருங்கள்: விக்கிரவாண்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

விழுப்புரம்: நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றியை கொடுத்ததுபோல் இடைத்தேர்தலில் அமோக வெற்றியை தாருங்கள் என்று விக்கிரவாண்டியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா (எ) சிவசண்முகத்திற்கு திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் திருவமாத்தூர், காணை, பனமலைபேட்டை, அன்னியூர் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 2 மாதத்திற்கு முன் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40, கிட்டதட்ட 100 சதவீத வெற்றியை அளித்தீர்கள். இந்த விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 8 ஆயிரம் வாக்குகளை ரவிக்குமாருக்கு கூடுதலாக அளித்துள்ளீர்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் புகேழந்தியை 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவைத்தீர்கள். அதேபோல் அன்னியூர் சிவாவை குறைந்தது 50 ஆயிரம் வாக்குள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை பார்த்து, பார்த்து செய்து கொண்டிருக்கிறார். முதல் கையெழுத்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைத்தார். அடுத்து ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைவு, மகளிர்கள் அதிகம் பயன்பெறும் விடியல் பயணத்தில் 3 வருடத்தில் 500 கோடி முறை பயணம். இந்த மாவட்டத்தில் மட்டும் 8 கோடி முறை பயணம் செய்துள்ளனர். புதுமை பெண் திட்டத்தில் அரசுபள்ளியில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை திட்டத்தில் தமிழகம் முழுவதும் 2.72 லட்சம் பேரும், இந்த மாவட்டத்தில் 10 ஆயிரம் பேரும் பயனடைந்துள்ளனர்.

இன்ெனாரு முக்கியமான திட்டம், இந்தியாவிலேயே முதன்முறையாக முதலமைச்சர் அறிவித்த திட்டம் காலை உணவு திட்டம். பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு வெறும் வயிற்றில் அனுப்பிவிட்டு அதே நினைப்பா இருப்பாங்க. ஆனால் இன்று வாழ்த்தி அனுப்புகிறார்கள். இன்று சாப்பாடு போடுவதற்கும், கல்வி கற்று கொடுப்பதற்கும் நம்முடைய முதலமைச்சர் இருக்கிறார், திராவிட மாடல் அரசு இருக்கிறது என்று தைரியத்தோடு, நம்பிக்கையோடு இருக்கிறார்கள். இந்த திட்டத்தில் 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் தினமும் காலையில் தரமான உணவினை சாப்பிட்டுதான் கல்வி கற்க செல்கிறார்கள். அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த முதலமைச்சர் உத்தரவு போட்டிருக்கிறார். காலைஉணவு திட்டத்தில் இந்த மாவட்டத்தில் 66,000 மாணவ, மாணவிகள் பயன்பெற்றுவருகிறார்கள்.

இதைவிட எல்லாவற்றிற்கும் முத்தான திட்டம், அது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியில் தகுதியான மகளிர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்து, கடந்த செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாளில் தொடங்கி கிட்டதட்ட 1.16 கோடி மகளிர்களுக்கு 11 மாதமாக ரூ.11 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 60,000 மகளிர்கள் பயன்பெற்றிருக்கிறார்கள். இப்படிபட்ட திட்டங்கள் தொடரவேண்டுமென்றால் திராவிட மாடல் ஆட்சியை வாழ்த்தி வரவேற்று அன்னியூர்சிவாவை பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெறவைத்து சட்டமன்றத்திற்கு அனுப்பிவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.