Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாடாளுமன்றத்திற்கு சென்ற திமுக எம்பி எம்.எம்.அப்துல்லாவை மறித்து கேள்வி கேட்ட சிஐஎஸ்எப் அதிகாரி: துணை ஜனாதிபதியிடம் புகார்

புதுடெல்லி: மக்களவை கட்டிடத்திற்குள் சென்ற தன்னை தடுத்தி நிறுத்திய சிஐஎஸ்எப் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை சபாநாயகருமான ஜெகதீப் தங்கருக்கு திமுக மாநிலங்களவை எம்பி எம்.எம்.அப்துல்லா புகார் கடிதம் எழுதி அனுப்பு வைத்துள்ளார். தனது புகார் கடிதத்தில் எம்பி எம்.எம்.அப்துல்லா கூறியிருப்பதாவது: நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்ற கட்டிடத் வளாகத்தில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன். பிற்பகல் 2.40 மணியளவில், நான் நாடாளுமன்ற ஹவுஸ் தோட்டத்திற்குள் நுழைந்தபோது அங்கிருந்த சி.ஐ.எஸ்.எப் அதிகாரி என்னை தடுத்து நிறுத்தினார். அப்போது நாடாளுமன்றத்திற்கு எதற்காக வந்தீர்கள் என்று என்னிடம் சம்பந்தம் இல்லாத பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

இது திட்டமிட்டு செய்தது போன்று இருந்தது. அவரது இந்த நடத்தையால் நான் அதிர்ச்சி அடைந்தேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்ட நிகழ்வுகள் ஏதும் இல்லாவிட்டாலும், நாடாளுமன்றத்தின் உள்ளே செல்வதற்கு அனைத்து அதிகாரமும் சட்டபூர்வமாக உள்ளது. அதன் அடிப்படையில் தான் நான் உள்ளே சென்றேன். தவறு செய்த சி.ஐ.எஸ்.எப் அதிகாரி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேப்போன்று மாநிலங்களவை மற்றும் அதன் உறுப்பினர்களின் கண்ணியத்தை நிலை நாட்டவும் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.