Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாடாளுமன்றத்தில் பொறுப்பேற்ற புதிய மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து: பதவிக்காலம் நிறைவடைந்த எம்.பிக்களுக்கு பாராட்டு

சென்னை: நாடாளுமன்றத்தில் புதிதாக மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்ற எம்.பிக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற வரலாற்றில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நான்கு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றித் தனக்கு கிடைத்த நீண்ட நெடிய அனுபவத்தின் வாயிலாக, தமிழர் நலனையும் தமிழ்நாட்டின் உரிமைகளையும் சங்கநாதமென முழங்கியவர்.

1978-ல் கலைஞரால் முதன்முறையாக மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்பட்ட வைகோவின் குரல், அன்று எப்படி ஒலித்ததோ, 47 ஆண்டுகள் கழித்து தனது 81வது வயதில் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு நிறைவடைகிற நாளிலும் அதே குரலில் உரிமைக்காக ஒலித்ததைக் கேட்டு மெய்சிலிர்த்தது. வைகோ திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினராக தொடர்ந்து மூன்று முறை பணியாற்றிய காலத்தில், ‘நாடாளுமன்ற புலி’ என்கிற அளவிற்கு அவர் குரல் அங்கு ஒலித்தது மட்டுமின்றி, கழக மேடைகளிலும் சிங்கமென அவருடைய கர்ஜனை கேட்கும்.

அவரை அழைத்து பல கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். அவருடைய பேச்சில், அரசியல் வரலாற்றைக் கேட்டிருக்கிறேன். ஜூலை 24ம் தேதி மாநிலங்களவையில் தனக்கான பிரியாவிடை நிகழ்வில் வைகோ கலைஞரையும், கலைஞரின் மனசாட்சியான சிந்தனையாளர் முரசொலி மாறனையும் நினைவுபடுத்தி நன்றி கூறியதுடன், எனக்கும் நன்றி தெரிவித்ததை மருத்துவமனையிலிருந்து தொலைக்காட்சி வாயிலாகப் பார்த்தேன்.

திராவிட இயக்கத்தின் தூணாக நின்று, தமிழர்களின் உரிமைக்கான அவரது செயல்பாடுகள் மக்கள் மன்றத்தில் என்றும் தொடர்ந்திட வேண்டும் என அன்பு அண்ணனை வாழ்த்தி மகிழ்கிறேன். அதேபோல், கருப்பு-சிவப்பு கழகத்தில் சண்முகம் தொழிலாளர்களின் சிவப்பு சிந்தனை சார்ந்த உரிமைக் குரலாக இருப்பவர். 50 ஆண்டுகளுக்கு மேல் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தைக் கட்டமைத்து, ஒவ்வொரு மே தினத்திலும் தங்கள் சங்கத்தினருடன் என்னையும் சிவப்புச் சட்டையில் வீரவணக்கம் செலுத்த வைக்கும் வழக்கத்தைக் கொண்டிருப்பவர்.

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் அவையில் தொழிற்சங்கப் பிரதிநிதியாக முழங்கிய அவரது குரல், இந்திய நாடாளுமன்றத்திலும் முழங்கிட வேண்டும் என்பதால் கழகத்தின் உறுப்பினராக சண்முகம் மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தனது பணியினைச் சிறப்பாக நிறைவேற்றி, பதவிப் பொறுப்பை நிறைவு செய்திருக்கிறார். உரிமைகளை விட்டுத் தராத அவருடைய கொள்கை உணர்வும், தொழிலாளர் நலனில் அவருக்குள்ள அக்கறையும் மாநிலங்களவை விவாதங்களில் எதிரொலித்தன.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் சண்முகம் ஆற்றிய பணிகளுக்கு கழகத்தின் தலைவர் என்ற முறையில் என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவருடைய தொழிற்சங்கப் பணிகள் தொய்வின்றித் தொடர்ந்திட வாழ்த்தி மகிழ்கிறேன். மேலும், மூத்தோர் அவை என அழைக்கப்படும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் கழகத்தின் இளங்குருத்தாக அனுப்பி வைக்கப்பட்ட எம்.எம்.அப்துல்லா தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து, மாநிலங்களவையில் மக்கள் சேவகராகச் சிறப்பாகப் பணியாற்றி, மாற்றுக்கட்சியினரும் பாராட்டும் வகையில் நடந்துகொண்டதை அறிந்து கழகத்தின் தலைவர் என்ற முறையில் பெருமை கொள்கிறேன்.

மாநிலங்களவையில் வருகைப் பதிவு, எழுப்பிய கேள்விகள், பெற்ற பதில்கள், அதன் வழியாக நிறைவேறிய திட்டங்கள் என எல்லாவற்றிலும் சிறப்பாகச் செயல்பட்ட அப்துல்லாவின் ஓய்வில்லாப் பணிகள், குறுகிய காலத்திலேயே, அவரை முழுமையான ‘பார்லிமெண்ட்டேரியன்’ என அடையாளம் காட்டியிருக்கிறது. நாட்டுப்பற்றையும் மதநல்லிணக்கத்தையும் மாநிலங்களவை விவாதங்களில் உரத்த குரலில் அழுத்தமாகப் பதிவு செய்த அப்துல்லா, தனது பதவி பொறுப்பு நிறைவடையும் நாளிலும் மதநல்லிணக்க அடையாளமான கோரிக்கையை முன்வைத்தன் மூலம் கழகத்தின் வார்ப்பு என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.

சமூகநீதிப் பாதையில் தன் பயணம் தொடரும் என்று அவர் மாநிலங்களவையில் குறிப்பிட்டதுபோல, மக்கள் மன்றத்தில் கழகத்தின் சார்பில் அவருக்கான பணிகள் காத்திருக்கின்றன எனக் கூறி வாழ்த்தி மகிழ்கிறேன். அதேபோல், சமூகநீதி காக்க அயராது பணியாற்றும் - நீதிமன்றங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளைப் பெற்றுத்தந்து ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைகளைக் காத்து வரும் மூத்த வழக்கறிஞர் வில்சன் நாடாளுமன்ற மாநிலங்களவையில் மீண்டும் தன்னுடைய அழுத்தமான வாதங்களை வைத்து உரிமைக்குரல் எழுப்பவுள்ளார்.

அவருக்கும், மாநிலங்களவையில் புதிதாக பொறுப்பேற்று தங்களுடைய கருத்துகளை பதிவுசெய்யவுள்ள கமல்ஹாசன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோருக்கும் அவர்களது பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* 1978-ல் கலைஞரால் முதன்முறையாக மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்பட்ட வைகோவின் குரல், அன்று எப்படி ஒலித்ததோ, 47 ஆண்டுகள் கழித்து தனது 81வது வயதில் மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு நிறைவடைகிற நாளிலும் அதே குரலில் உரிமைக்காக ஒலித்ததைக் கேட்டு மெய்சிலிர்த்தது.