Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ம் தேதி துவக்கம்: நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக தகுதிநீக்க தீர்மானம் கொண்டு வர ஏற்பாடு

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். இதில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை தகுதி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் அனைத்து கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் முப்படைகளும் இணைந்து நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக, இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் நேற்று முன்தினம் டெல்லியில் ஆலோசனை நடத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டியில், ‘‘பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு, மழைக்கால கூட்டத்தொடருக்கான தேதிகளை பரிந்துரைத்துள்ளது. கூட்டத்தொடரை கூட்டுவதற்கான இந்த பரிந்துரை ஜனாதிபதிக்கு அனுப்பி முறைப்படி ஒப்புதல் பெற்று கூட்டத்தொடர் கூட்டப்படும்’’ என்றார்.

சிறப்பு கூட்டத்தொடர் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘ஒவ்வொரு அமர்வும் எங்களுக்கு சிறப்பு அமர்வுதான். மழைக்கால கூட்டத்தொடரில், விதிகளுக்கு உட்பட்டு, அனைத்து முக்கியமான விவகாரங்களும் விவாதிக்கப்படும். விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து இரு அவைகளின் வணிக ஆலோசனைக்குழு முடிவெடுக்கும்’’ என்றார்.

முன்னதாக, வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் சிக்கிய விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை தகுதிநீக்கம் செய்வதற்கான தீர்மானம் அடுத்த கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் என ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், ‘‘இது அரசியல் விவகாரம் அல்ல, ஊழல் சம்மந்தப்பட்டது. இது ஒரு முக்கியமான விஷயம். நீதித்துறையாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த இடமாக இருந்தாலும் சரி, ஊழலின் அச்சுறுத்தலுக்கு எதிராகப் போராடுவது அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு. இந்த விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட அரசு விரும்புகிறது. எனவே, தகுதிநீக்க தீர்மானத்தில் அனைத்து கட்சிகளும் பங்களிக்க வேண்டும். பெரும்பாலான கட்சிகள் நாளைக்குள் (இன்று) முடிவை தெரிவிப்பதாக கூறி உள்ளன’’ என்றார்.

நீதிபதி ஒருவரை தகுதி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர மக்களவையில் குறைந்தபட்சம் 100 எம்பிக்களின் ஆதரவும், மாநிலங்களவையில் 50 எம்பிக்களும் ஆதரவும் தேவை. இந்த தீர்மானம் 3-ல் 2 பங்கு ஆதரவுடன் மக்களவையிலோ அல்லது மாநிலங்களவையிலோ நிறைவேறினால் விசாரணை குழு அமைக்க மக்களவை சபாநாயகர் அல்லது மாநிலங்களவைத் தலைவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதுவார். உச்ச நீதிமன்ற நீதிபதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் நடுவர் ஆகியோர் அடங்கிய குழு இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும். அதனடிப்படையில் நீதிபதி யஷ்வந்த வர்மா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் அறிவித்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு மத்தியில் நாடாளுமன்றம் கூட இருப்பதால் கடும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப்படி குழு அமைக்கப்படுமா?

1968ம் ஆண்டு நீதிபதிகள் விசாரணை சட்டத்தின்படி, ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் எந்த அவையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், சபாநாயகர் அல்லது தலைவர், பதவி நீக்கத்திற்கான காரணங்களை விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். இது குறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், ‘‘தற்போதைய வழக்கு சற்று வித்தியாசமானது. ஏற்கனவே, முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவால் அமைக்கப்பட்ட உள்விசாரணை குழு தனது விசாரணையை முடித்து அறிக்கையை சமர்பித்து விட்டது. இந்த அறிக்கையை ஒதுக்கி விட முடியாது. எனவே இது குறித்து சபாநாயகர் முடிவெடுப்பார்’’ என்றார்.

47 நாட்கள் முன்பாக அறிவிக்க காரணம்?

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘ நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கான தேதிகள், 47 நாட்கள் முன்பாக ஒருபோதும் அறிவிக்கப்பட்டதில்லை. பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரின் தாக்கங்கள், சிங்கப்பூரில் உண்மைகளை ஒப்புக் கொண்ட முப்படைகளின் தலைமை தளபதி, அதிபர் டிரம்பின் மத்தியஸ்த பேச்சுகள் மற்றும் வெளியுறவு கொள்கையின் படுதோல்விகள் போன்ற விவாதிக்க உடனடியாக சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டுமென்ற காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருவதை தவிர்க்கவே இது செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மழைக்கால கூட்டத்தொடரில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் ஆதிக்கம் செலுத்தும். பிரதமர் சிறப்பு அமர்வில் இருந்து ஓடியிருக்கலாம். ஆனால், 6 வாரங்களுக்குப் பிறகு கடினமான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டும்’’ என்றார்.