Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாண்டூர் கிராம பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க மீண்டும் எதிர்ப்பு: போலீசார் - பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பாண்டூர் கிராம பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததால், போலீசார் - பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாண்டூர் கிராம பாலாற்றிலிருந்து பக்கத்து கிராமமான கிளாப்பாக்கம் கிராமத்திற்கு குடிநீர் எடுத்துச்செல்லும் வகையில், அரசு தரப்பில் நிதி ஒதுக்கப்பட்டது.

இப்பணிக்காக, டெண்டர் விடப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டூர் பாலாற்றில் இத்திட்டத்திற்காக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கி, அதற்கான தளவாட பொருட்களை இறக்கியவுடன் எங்கள் கிராமத்தில் உள்ள குடிநீர் பிரச்னையை தீர்க்காமல், பக்கத்து கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எனவே, எங்கள் கிராம பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது என்று பாண்டூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து அதிகாரிகள், பொதுமக்களிடம் பலமுறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் பலனளிக்கவில்லை. தொடர்ந்து, பலமுறை பணியை துவக்கியும் பாண்டூர் கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த முறை கிளாப்பாக்கம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில், ‘தங்களுக்கு பாண்டூர் கிராம பாலாற்றிலிருந்து தண்ணீர் வழங்க வேண்டுமென்று’ கிளாப்பாக்கம் ஊராட்சி பெண்கள் காலி குடங்களுடன் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தனர்.

இந்நிலையில், குடிநீர் பணியை நிறைவேற்றக்கோரி கிளாப்பாக்கம் கிராம மக்கள் சார்பில் சமீபத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், நேற்று மீண்டும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்காக வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. இதனையறிந்த, பாண்டூர் கிராம மக்கள் ஆண்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் அங்கு வந்து ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனத்தை மறித்தனர்.

உடனே அங்கு வந்த திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராதா, இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி ஆகியோர் பொதுமக்களிடம் சமரசம் பேசினர். அப்போது பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது, ஒரு கட்டத்தில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது, இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வழக்கம்போல் ஆழ்துளை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.