Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பல்லாவரம் அருகே சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு போலீஸ் காவலில் விசாரணை முடிந்து 5 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு: சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 7 பேர் அடைப்பு

செங்கல்பட்டு: பல்லாவரம் அருகே சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறுவர்கள் உள்பட 12 பேரை கைது செய்தனர். இதில் 5 பேரை காவலில் எடுத்து, காஞ்சிபுரம் எஸ்பி தலைமையில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பல்லாவரம் அருகே பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இச்சிறுமியின் பெற்றோர் தினமும் காலையில் வேலைக்கு சென்று விடுவார்கள். சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தண்ணீர் கேன் போட வந்தவர், சிறுமியை காதலிப்பது போல் நடித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு, தனது நண்பர்களான 7 சிறுவர்கள் மற்றும் 5 வாலிபர்களுடன் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் சிறுமி, மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டு மனநோயாளி போல் ஆகிவிட்டார். இதனால் சிறுமியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தாயார் அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், இதுபற்றி பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 7 சிறுவர்கள் மற்றும் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த நந்தகுமார் (19), சஞ்சய் (19), எஸ்.சஞ்சய் (18), முடிச்சூரை சேர்ந்த சூர்யா (22), பல்லாவரத்தை சேர்ந்த நிக்சன் (22) உள்பட 12 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ உள்பட பல்வேறு குற்ற பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 7 சிறுவர்களை அடைத்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் சஞ்சய், சூர்யா, நந்தகுமார், நிக்சன், எஸ்.சஞ்சய் ஆகிய 5 பேரையும் விசாரணைக்காக போலீசார் காவலில் எடுத்தனர். தொடர்ந்து, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் வைத்து விசாரிக்காமல், காஞ்சிபுரம் ஐஜி மேற்பார்வையில், மாவட்ட எஸ்பி மற்றும் திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பி தலைமையில் தீவிரமாக விசாரித்தனர். பின்னர் நேற்று மாலை போலீஸ் காவலில் விசாரணை முடிந்து 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே 5 பேரும் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டபோது, இன்ப சுற்றுலாவுக்கு செல்வது போல் ஜாலியாக சிரித்தபடி விசாரணைக்கு வந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதுபோன்று சிறுமிகள் மற்றும் பெண்களிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு நீதிமன்றம் பாரபட்சமின்றி மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.