பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி முனீர் இந்தியாவுடன் போருக்கு ஏங்குகிறார்: இம்ரான்கானின் சகோதரி குற்றச்சாட்டு
ராவல்பிண்டி: பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், பல வழக்குகளில் தண்டனை பெற்று ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் கடந்த 2023 ஆகஸ்ட் முதல் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக இம்ரான்கானின் மரணம் குறித்து வதந்திகள் பரவின. இந்தநிலையில் இம்ரான்கான் சகோதரிகளில் ஒருவரான டாக்டர் உஸ்மா கான், அடியாலா சிறையில் அவரை 20 நிமிடம் சந்தித்தார். அதன்பிறகு கூறும்போது,’ எனது சகோதரர் சிறையில் இருப்பதற்கு ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர்தான் காரணம். பாகிஸ்தான் மக்களை அடக்க அவர்கள் விரும்புகிறார்கள். மக்களின் குரல் கேட்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. மக்கள் இம்ரான் கானுக்குப் பின்னால் நிற்கிறார்கள். எனவே அவரை தனிமைப்படுத்தினால் மக்கள் அவரை மறந்துவிடுவார்கள் என்று அவர்கள் நினைத்தார்கள்.
அசிம் முனீர் தீவிரவாத இஸ்லாமியர். இஸ்லாமிய பழமைவாதி. இந்தியாவுடன் போருக்கு ஏங்குவதற்கு இதுவே காரணம். அவரது இஸ்லாமிய தீவிரமயமாக்கலும் பழமைவாதமும் இஸ்லாத்தை நம்பாதவர்களுக்கு எதிராகப் போராட அவரை கட்டாயப்படுத்துகின்றன. இம்ரான்கான் ஆட்சியில் வரும்போதெல்லாம், அவர் எப்போதும் இந்தியாவுடன், ஏன் பாஜவுடன் கூட நட்பு கொள்ள முயற்சிப்பதை நீங்கள் காண்பீர்கள். தீவிரவாத இஸ்லாமியரான அசிம் முனீர் இருக்கும்போதெல்லாம், இந்தியாவுடன் போர் ஏற்படும், இந்தியா மட்டுமல்ல, இந்தியாவின் நட்பு நாடுகளும் கூட பாதிக்கப்படும் என்பதை நீங்கள் காண்பீர்கள். இம்ரான்கான் பாகிஸ்தானின் சொத்து. அவரை சிறையில் இருந்து விடுவிக்கும் முயற்சியை மேற்கு நாடுகள் மேற்கொள்ள வேண்டும்’ என்றார். இதற்கிடையே பீல்ட் மார்ஷல் ஜெனரல் அசிம் முனிர் வேண்டுமென்றே ஆப்கனை வம்புக்கு இழுப்பதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

