Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பஹல்காமில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே உளவு பார்த்த தீவிரவாதிகள்: என்.ஐ.ஏ. அதிர்ச்சி தகவல்!!

ஸ்ரீநகர்: பஹல்காமில் தாக்குதல் நடத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தீவிரவாதிகள் காஷ்மீர் வனப்பகுதிக்குள் பதுங்கி இருந்து 4 இடங்களில் உளவு பார்த்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியது. இயற்கையின் அழகை ரசிக்க சென்ற சுற்றுலா பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் கொடூரமாக சுட்டுக்கொன்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்திய அரசு. சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பில் பயன்படுத்த கூடாது என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே தொடர்ந்து போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில், ஒன்றிய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, முறைப்படி இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. என்.ஐ.ஏ.வின் ஐ.ஜி., டி.ஐ.ஜி., ஆகியோர் கண்காணிப்பில் பல்வேறு என்.ஐ.ஏ. குழுக்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளன. தாக்குதலை நேரில் பார்த்தவர்களிடம் விசாரித்து வருகிறார்கள். மேலும் தாக்குதல் சம்பவத்தில் உயிர்தப்பிய சுற்றுலா பயணிகள், அவரவர் சொந்த மாநிலங்களுக்கு சென்று அவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பலியானவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து தகவல்களை திரட்ட என்.ஐ.ஏ. குழுக்கள் நாடு முழுவதும் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன. அங்கு அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பஹல்காமில் தாக்குதல் நடத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தீவிரவாதிகள் காஷ்மீர் வனப்பகுதிக்குள் பதுங்கி இருந்து 4 இடங்களில் உளவு பார்த்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் தற்போதும், தெற்கு காஷ்மீரில் தங்கியிருப்பதாக என்.ஐ.ஏ. அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது. அவர்களை தேடும் பணியில் ராணுவத்தினர் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் சந்தேகிக்கப்படும் நபர்கள், சுற்றுலா கைடுகள், பஹல்காம் பகுதியில் வசிக்கும் மக்கள் என 100க்கும் மேற்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.