கன்னியாகுமரி மாவட்டம் அச்சன்குளம் பகுதியைச் சேர்ந்த எம்பில் பட்டதாரியான பெலின் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பயிர்களை ஆர்கானிக் முறையில் விளைவித்து நேரடியாக விற்பனை செய்வது குறித்து கடந்த இதழில் கண்டோம். அவர் பாரம்பரிய நெல் சாகுபடியில் இறங்கி வெற்றி பெற்றது குறித்தும் இந்த இதழில் காண்போம். அரசு சார்பில் நடைபெறும் பாரம்பரிய நெல் விளைச்சல் போட்டியில் கலந்துகொண்டு 2 முறை பரிசு வாங்க முடியாவிட்டாலும், 3வது முறையாக நம்பிக்கையோடு களம் இறங்கினேன். இந்த முறை டிரம் சீலர் மூலம் 30 கிலோ கீரைச்சம்பா நெல் விதைகளை வாங்கி விதைத்தேன். விதைப்பிற்கு முன்பு வயலுக்குத் தேவையான தழைச்சத்திற்காக எருக்கு, புங்கை, வாகை தழைகளை வயல்களில் போட்டேன். அகஸ்தீஸ்வரம் வேளாண்மை உதவி இயக்குநர் சுனில்தத்தைச் சந்தித்து சில ஆலோசனைகள் பெற்றேன். அவர் நேரடியாக எனது வயலுக்கு வந்து பார்த்தார். அப்போது வயலில் வெள்ளைத் தன்மையுடன் மண் இருந்தது. அதனைப் பார்த்த அவர், உவர்ப்புத் தன்மையுடன் வயல் இருப்பதால் சிப்சம் உரம் போட வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படி நான் ஜிப்சம் உரம் போட்டு விதைப்புப் பணியை மேற்கொண்டேன்.அதன்பிறகு அவர் ஆலோசனைப்படி உரங்களை வயலில் இட்டேன்.
15 நாட்களுக்கு ஒருமுறை பொட்டாஷ், யூரியா, சூப்பர்பாஸ்பேட் போன்ற உரங்களை வேளாண்மை அதிகாரிகள் பரிந்துரைக்கும் அளவில் போட்டேன். அதனுடன் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா போன்ற உயிர் உரங்களையும் கலந்து போட்டேன். இதுதவிர அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா போன்ற உயிர் உரங்களை திரவ வடிவிலும் வாங்கி ஸ்பிரே மூலம் கொடுத்துவந்தேன். மேலும் போரான், காப்பர், சிங் உள்ளிட்ட 9 வகையான சத்துக்கள் நிறைந்த நுண்ணூட்ட உரங்களையும் பரிந்துரை செய்யப்பட்ட அளவிற்கு போட்டு வந்தேன். கதிர்வரும் நேரத்தில் குருத்துப்புழு தாக்காமல் இருக்க அதிகாரிகள் தெரிவித்த மருந்தை அடித்தேன். இவ்வாறு வேளாண் துறை அலுவலர்களின் அறிவுறுத்தலை முறையாக கடைபிடித்து வந்ததால் கீரைச்சம்பா பயிரில் நல்ல மகசூல் கிடைத்தது. அறுவடையின்போது வேளாண் துறையினர் வயலுக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தார்கள். நெல் பயிரிடப்பட்டுள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் 50 சென்ட் நிலத்தை மட்டும் அளந்து, அதில் இருந்த நெல் பயிர்களை அறுவடை செய்தனர். அறுவடை முடிந்து மகசூலை அளவீடு செய்தபோது 2680 கிலோ நெல் இருப்பது தெரியவந்தது.
தமிழக அளவில் இது அதிக மகசூல் என்பதால் தமிழக அரசு அறிவித்த முதல் பரிசு எனக்கு கிடைத்தது. வேளாண்துறை அமைச்சர் எனக்கு அதற்கான சான்றிதழ் மற்றும் ரொக்கப்பணம் ரூ.1 லட்சம் வழங்கினார். இது எனக்கு மிகப்பெரிய பெருமையைத் தருவதாக இருந்தது. தற்போது தமிழக முதல்வர் சன்ன ரக நெல் சாகுபடியில் அதிக மகசூல் விளைவித்தால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறார். அந்தப் போட்டியிலும் வெற்றி பெறுவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறேன்’’ என பேசி முடித்த பெலினின் ஒவ்வொரு வார்த்தையிலும் நம்பிக்கை மிளிர்கிறது.
தொடர்புக்கு:
பெலின்: 90259 46387.
உதவி வேளாண்மை அதிகாரி சுனில்தத்: 63742 54317.
ஆர்வம் மற்றும் தன் முனைப்பு இருந்தபோதும் உரம், மருந்து, பராமரிப்பு என அனைத்திற்கும் வேளாண் அலுவலர்கள் வழங்கிய ஆலோசனைகளை முறையாக கடை பிடித்ததும் விவசாயி பெலின் பாரம்பரிய நெல் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாய் அமைந்திருக்கிறது. இதுகுறித்து அகஸ்தீஸ்வரம் வேளாண்மை துணை இயக்குநர் சுனில்தத் கூறுகையில், `` பெலினுக்கு தரமான கீரைச்சம்பா விதைகளோடு பல ஆலோசனைகளையும் வழங்கினோம். நாங்கள் வழங்கிய அனைத்து பரிந்துரைகளையும் அவர் முறையாக பின்பற்றினார். நடவு செய்த 10 நாட்களுக்குள் நுண்ணூட்ட உரத்தை ஏக்கருக்கு 5 கிலோ வழங்கினோம். தொடர்ந்து நுண்ணீர் உரங்களான அசோஸ் பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா, சிங் பேக்டீரியா, பொட்டாஷ் பேக்டீரியா போன்ற உரங்கள் போடப்பட்டது. அதுபோல் சூப்பர் பாஸ்பேட், யூரியா, பொட்டாஷ் ஆகிய உரங்கள் மொத்தமாக போடாமல் விகிதப்படி போடப்பட்டது. நெல் பயிரைத் தாக்கும் குருத்துப்பூச்சி மற்றும் கதிர்நாவாய் பூச்சிகளைக் கட்டுப்படுத்திவிட்டால் நல்ல மகசூல் பெறலாம் எனக் கூறினோம். அதன்படி குருத்துப்புழு தாக்காமல் இருக்க 35வது நாள், 50வது நாள் ஆகிய இருநாட்கள் மருந்து அடிக்கப்பட்டது. அதுபோல் கதிர்நாவாய் பூச்சியைக் கட்டுப்படுத்த பயிரில் இருந்து கதிர்வந்து பால்கட்டும்போதும், அதன்பிறகு 10 நாட்கள் கடந்தும் இருமுறை மருந்து வழங்கப்பட்டது. எங்களது ஆலோசனைகளுடன் அவரது முழு முயற்சிகளும் சேர்ந்து நல்ல மகசூலைத் தந்தது’’ என்கிறார்.
பயிர்கள் சாயாமல் இருக்க...
மழைக்காலத்தில் நெற்பயிர்கள் சாயாமல் இருக்க விவசாயி பெலின் ஒரு டெக்னிக்கைப் பயன்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ``பாரம் பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்யும்போது நெற்பயிர்கள் நன்கு உயரமாக வளரும். குறிப்பாக கீரைச்சம்பா பயிரும் அதிக உயரமாக வளரும். குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் காற்றுடன் மழையும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக மழையும் பெய்யும். அந்த சமயங்களில் மழையில் கீரைச்சம்பா பயிர்கள் சாயாமல் இருக்க, சாகுபடி செய்த 25 மற்றும் 40வது நாட்களில் உயரத்தைக் குறைக்கும் வகையில் பயிர்களை அறுத்துவிட்டேன். இதனால் பயிர்கள் சாயாமல் இருந்ததோடு, அதிக அளவில் தூர்கள் கட்டி நல்ல மகசூலும் கிடைத்தது’’ என்கிறார்.
பச்சை மூலிகை கரைசல்!
இயற்கை விவசாயத்தில் தற்போது பல்வேறு வகையான கரைசல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் பச்சை மூலிகைக் கரைசல். இது செடிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதோடு, பூச்சிகளைத் தடுக்கும் இயற்கை மருந்தாகவும் செயல்படுகிறது. இதனை ஒருசில இலைகள் கொண்டு எளிதாக தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்
முருங்கை இலை 1 கட்டு
தூதுவளை இலை 1 கட்டு
பசலை இலை 1 கட்டு
சிறியா நங்கை 1 கட்டு
பரந்தை இலை சிறிது
புதினா அல்லது துளசி சிறிது
தண்ணீர் 10 லிட்டர்.
தயாரிக்கும் முறை
மேலே கூறப்பட்ட இலைகளையும், மூலிகைகளையும் நன்கு சுத்தமாக கழுவி நறுக்கவும். விறகு அல்லது கரண்டி வைத்துக் கொண்டு இந்த பசுமை இலைகளை ஒரு மட்டி அல்லது பாத்திரத்தில் போட்டு 5 லிட்டர் தண்ணீரில் நன்கு அரைத்துக்கொள்ளவும். பின் இதை ஒரு துணியால் எடுத்து மற்ற 5 லிட்டர் தண்ணீரில் கலந்து, மொத்தம் 10 லிட்டர் கரைசலாகத் தயாரிக்கவும்.இந்தக் கரைசலை 12 மணி நேரம் நிழலில் ஊற விடலாம். பிறகு இந்தக் கரைசலை விவசாய நிலத்தில் தெளிக்கலாம். இவை பயிர்களின் இலை வளர்ச்சிக்கு உதவுகிறது. பயிர்களைப் பூச்சிகள் தாக்காமல் பாதுகாக்கிறது. செடிகளின் மெல்லிய தண்டு, இலைகள் மற்றும் கொடி வகை காய்கறி செடிகளுக்கு உரமாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. இந்த கரைசலை வாரத்திற்கு ஒருமுறை அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம்.