27ம் தேதி 1.22 லட்சம் நேற்று 2.33 லட்சமானது: நெல்லை மாவட்டத்தில் 3 நாளில் வாக்காளர் நீக்கம் இரட்டிப்பு எப்படி?அனைத்து கட்சி கூட்டத்தில் கலெக்டர் சுகுமார் தகவல்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இறப்பு, இரட்டை பதிவு, கண்டறிய இயலாதவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 464 வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சுகுமார் தெரிவித்தார். நெல்லை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் காலநீட்டிப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சுகுமார் பேசுகையில், டிச.1ம் தேதி காலை 8 மணி வரை மொத்தம் உள்ள 14 லட்சத்து 18 ஆயிரத்து 325 வாக்காளர்களில் 13 லட்சத்து 89 ஆயிரத்து 708 வாக்காளர்களின் விவரங்கள், அதாவது 97.98 சதவீதம் வாக்காளர்களின் கணக்கீட்டு படிவங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கண்டறிய இயலாதவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், இரட்டைப்பதிவு கொண்டவர்கள் என்ற வகைப்பாட்டில் நெல்லை தொகுதியில் 47 ஆயிரத்து 598 (15.56%) பேரும், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் 46 ஆயிரத்து 461 (17.83%) பேரும், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 36 ஆயிரத்து 213 (12.94%) பேரும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 57 ஆயிரத்து 567 (19.29%) பேரும், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 45 ஆயிரத்து 625 (16.67%) பேரும் என மொத்தம் 2 லட்சத்து 33 ஆயிரத்து 464 பேர் உள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் 78 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கடந்த 6 நாட்களுக்கு முன்பு கலெக்டர் சுகுமார் தெரிவித்தார். இந்த நீக்கம் கடந்த 27ம் தேதி நடந்த அனைத்து கட்சி கூட்டத்தின் போது 1.22 லட்சமாக அதிகரித்தது. இந்நிலையில் நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தின் போது 2.33 லட்சமாக உயர்ந்து இரட்டிப்பாகி உள்ளது. இறந்தவர்கள், கண்டுபிடிக்க இயலாதவர்கள், இரட்டை பதிவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என தேர்தல் வட்டாரங்கள் தெரிவித்தன.


