Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கரிசல்பட்டி கொள்முதல் நிலையத்தில் 15 நாட்களாக காத்திருந்தும் நெல்லை கொள்முதல் செய்யாமல் மூடிச்சென்ற அவலம்

*விவசாயி கண்ணீர் மல்க புகார்

வீரவநல்லூர் : கரிசல்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தில் 15 நாட்களாக விவசாயியின் நெல்லை கொள்முதல் செய்யாமல் மூடிச் சென்றதாக விவசாயி கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் முன்கார் சாகுபடி கடந்த பிப்ரவரி மாதம் துவங்கியது.

இதனையடுத்து விவசாயிகள் நலன் கருதி சேரன்மகாதேவி வட்டாரத்தில் பத்தமடை, சேரன்மகாதேவி, வடக்கு காருக்குறிச்சி, வடக்கு வீரவநல்லூர், மேலச்செவல், கோபாலசமுத்திரம், தெற்கு வீரவநல்லூர், கரிசல்பட்டி, பொட்டல் மற்றும் கல்லிடைக்குறிச்சி ஆகிய 10 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் கரிசல்பட்டி நெல் கொள்முதல் நிலையம் மூலம் திருவிருத்தான்புள்ளி, கரிசல்பட்டி, உப்பூரணி, வெங்கடரங்கபுரம், பட்டங்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயன்பெற்றனர்.

இந்நிலையில் கடந்த 20 தினங்களுக்கு முன்னர் வெங்கடரங்கபுரத்தை அடுத்த மேலசடையமான்குளத்தை சேர்ந்த சார்லஸ் ஞானதுரை (55) என்ற விவசாயி தனது விளைநிலத்தில் விளைந்த நெல்மணிகளை மூட்டை கட்டி 60 நெல் மூடைகளுடன் கரிசல்பட்டி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்துள்ளார்.

பின்னர் அங்கு பணிபுரியும் பணியாளர்களிடம் நெல் கொள்முதல் செய்யுமாறு கேட்டுள்ளார். அதற்கு நாளை எடைபோடப்படும் எனக்கூறியுள்ளனர். இதனையடுத்து தான் கொண்டு வந்த நெல் மூடைகளை நெல் கொள்முதல் நிலையத்திலேயே அடுக்கி வைத்துவிட்டு மறுநாள் வந்து கேட்டுள்ளார்.

அப்போது பணியாளர்கள் சரிவர பதில் கூறாமல் அவரை அலைக்கழித்துள்ளனர். இதனையடுத்து சேரன்மகாதேவி வட்டார வேளாண்மை அலுவலகத்திற்கு சென்று சார்லஸ் இதுகுறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அதிகாரிகள் செல்போன் மூலம் சம்பந்தப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு சார்லஸின் நெல்லை கொள்முதல் செய்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுள்ளனர். தொடர்ந்து 15 தினங்களுக்கு மேலாகியும் சார்லஸின் நெல்லை கொள்முதல் செய்யாமல் வேண்டுமென்றே கிடப்பில் போட்டு கடந்த 29ம்தேதி நெல் கொள்முதல் நிலையத்தை அதிகாரிகள் பணியாளர்கள் மூடி சென்றனர்.

அதிகாரி மீது நடவடிக்கை

விரக்தியடைந்த சார்லஸ் நெல் மூடைகளுடன் மூடிய கொள்முதல் நிலையத்தில் கடந்த 5 நாட்களாக காத்திருக்கிறார். மேலும் தான் அலைக்கழிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டது குறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.

புகார் மனுவில் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்கள் பெற்று நெல் மூடைகளை கொண்டு சென்ற போதிலும் தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக நெல் கொள்முதல் நிலைய ஒப்பந்ததாரரின் நிர்பந்தத்தால் பணியாளர்கள் தனது நெல்லை கொள்முதல் செய்யவில்லை என்றும் இதனால் ரூ.1 லட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரனை மேற்கொண்டு விவசாயியின் நெல்லை கொள்முதல் செய்யாமல் 15 நாட்களாக கிடப்பில் போட்டவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.